தினமும் 16 மணி நேரம் வேலை! உழைத்து உழைத்து தேய்ந்த கைகள்! நெஞ்சை கணக்கச் செய்யும் 52 சிறுவர்களின் நிலை! சென்னை பரிதாபம்!

சென்னையின் பல்வேறு இடங்களில் கொத்தடிமைகளாக பணியமர்த்தப்பட்ட 61 பேரை போலீசார் மீட்டுள்ளனர்.


 இதுதொடர்பாக, டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையின் வால் டாக்ஸ் ரோடு, கொண்டித்தோப்பு  உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் தங்க நகை தயாரிப்பு குடோன்களில், மேற்கு வங்கத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட 61 பேர் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக, கொத்தடிமைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தது. இதையடுத்து, குறிப்பிட்ட பகுதிகளில் சென்னை மாநகர போலீசார், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் குழுவினர் கூட்டாகச் சேர்ந்து சோதனை நடத்தினர்.  

அப்போது, அங்கிருந்து 61 கொத்தடிமைகள், மீட்கப்பட்டனர். அவர்களில் 17 பேர் 14 வயதுக்கும் குறைவான மைனர் சிறுவர்கள் ஆவர். இதர 35 பேர் 15 முதல் 18 வயதானவர்கள். மற்றவர்கள் 18 முதல் 22 வயது உள்ளவர்கள் ஆவர். இவர்கள் அனைவரையும் மீட்ட போலீசார், அவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக இந்த பணியில் ஈடுபட்டு வருவதாகக் கண்டறிந்தனர். அவர்களை இத்தகைய இன்னலுக்கு ஆளாக்கியவர்கள் பற்றி விரிவான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.