யாழ்ப்பாணம் - கொழும்பு செல்ல மீண்டும் விமான சேவை, சென்னையிலிருந்து செல்வோருக்கு புது வசதி

தமிழ்நாட்டிலிருந்து வட இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு நேரடியாகச் செல்பவர்களுக்கு வசதியாக அங்கு அண்மையில் விமான சேவை தொடங்கப்பட்டது.


அதன் தொடர்ச்சியாக, இன்று முதல் யாழ்ப்பாணம் - கொழும்பு வழித்தடத்தில் நீண்ட காலத்துக்குப் பிறகு பயணியர் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிட்ஸ் ஏர் எனும் தனியார் நிறுவனத்தின் சார்பில் இந்த விமானச் சேவை இயக்கப்படுகிறது. கொழும்பு, இரத்னமாலை விமான நிலையத்திலிருந்து இன்று காலை 7.30 மணிக்குப் புறப்பட்ட விமானம், 9 மணியளவில் யாழ்ப்பாணம், பலாலி விமானநிலையத்தைச் சென்றடைந்தது.

அங்கிருந்து 10.50 மணிக்கு திரும்பப் புறப்பட்டுச் சென்றது. வழக்கமாக, கொழும்புவிலிருந்து காலை 7.30 மணிக்குப் புறப்படும் இந்த விமானம், 8.30 மணிக்கு யாழ்ப்பாணத்தை அடையும். மீண்டும் அங்கிருந்து 9.30 மணிக்குக் கிளம்பி ஒரு மணி நேரத்தில் கொழும்புவைச் சென்றடையும். 

கொழும்பு - யாழ்ப்பாணம் வழித்தடத்தில் ஏழு தொடர்வண்டிச் சேவைகள் இருந்துவருகின்றன. பேருந்து, தொடர்வண்டிகளில் பயணித்தால் ஆறு மணி நேரமாவது பிடிக்கக்கூடிய தொலைவை, இவ்விமான சேவையில் ஒரு மணி நேரத்தில் அடையமுடியும் என்பதால் சென்னை வழியாக வரும் சுற்றுலாப் பயணிகள், உள்நாட்டு வணிகர்கள், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் வரவேற்பு இருக்கும் என விமானசேவைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த விமான சேவைக்கு ஒரு நடைக் கட்டணமாக ரூ.7,500 இலங்கைப் பணம் வசூலிக்கப்படுகிறது. இதுவே இராணுவத்தால் இயக்கப்படும் விமான சேவையில் 9 ஆயிரம் ரூபாய் கட்டணம் ஆகும். 

அருவி ஊடகத்துக்குப் பேசிய பிட்ஸ் ஏர் விமான நிறுவனத்தின் மேலாளர் குலசிங்கம் வசீகரன், “ இந்த விமான சேவையானது திங்கள், புதன், சனி ஆகிய நாள்களில் வழங்கப்படும். பயணிகள் அதிகபட்சமாக 20 கி.கி. எடையுள்ள பொருள்களை எடுத்துச்செல்லமுடியும். முதல் 7 கி.கி.வரை கட்டணம் இல்லை. அதற்கு மேல் 20.கி.கி.வரை 750 ரூவா கட்டணம் வசூலிக்கப்படும்.” என்று தெரிவித்தார்.