ஸ்பெஷல் கிளாஸ் என்ற பெயரில் பேராசிரியர்கள் வீட்டிற்கு மாணவிகள் செல்வதற்கு சென்னை பல்கலைக் கழகம் தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பியுள்து.
மாணவிகளை வீட்டிற்கு அழைத்து என்ன வேலை? சென்னை பல்கலை., பேராசிரியர்களுக்கு எச்சரிக்கை!
மேலும் பேராசிரியர்கள் பாலியல் தொல்லை தந்தால் இனிமேல் நேரடியாக துணைவேந்தரிடமே புகார் தரலாம் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பொதுவாகவே பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக காலம் காலமாக வரும் புகார்கள்தான். ஏழை மாணவிகளையும், கல்வி தரத்தில் குறைவாக இருக்கும் மாணவிகளிடம் அதிக மதிப்பெண் போடுவதாக கூறி ஆசிரியர்கள் பாலியல் தொல்லை தருவதாகவும், தந்ததாகவும் காவல் நிலைய படிகள் ஏறிய மாணவிகள், பெற்றோர்கள் ஏராளம்.
சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் சிறையில் உள்ளார். பெரும்பாலும் பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவ மாணவிகள் நிறைய பாடங்கள் படிக்க வேண்டி இருப்பதால் கல்லூரிகளில் போதிய நேரம் இல்லாத காரணத்தால் டியுஷன் என்ற பெயரில் பேராசிரியர்கள் வீடுகளுக்கு செல்வது வழக்கம்.
ஒரு சில சமயங்களில் பேராசிரியர்கள் வீட்டிற்கு தனிமையில் செல்லும் மாணவிகளை பேராசிரியர்கள் அதிக மதிப்பெண் போடுவதாக ஆசை வார்த்தை கூறி மூளைச் சலவை செய்து தங்கள் இச்சையை தீர்த்துக் கொள்வதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.பெரும்பாலான மாணவிகள் வெளியில் தெரிந்தால் நமக்குத்தான் அசிங்கம் என உள்ளுக்குள்ளேயே புழுங்கி ஒரு வழியாக படிப்பை முடித்து விட்டு வெளியில் வந்து விடுகின்றனர்.
இந்நிலையில் இந்த பிரச்சனைகளுக்கு முடிவு கட்ட முதற் கட்டமாக சென்னை பல்கலைக் கழகம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இனிமேல் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பேராசிரியர்களின் வீடுகளுக்கு மாணவியர் செல்லக்கூடாது என்பதுதான் அது.
மேலும் பல்கலை பேராசிரியர்களுடன் கல்விச் சுற்றுலா செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஸ்ரீனிவாசன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களுக்கு எந்த விதத்திலும் இடம் தரக்கூடாது என்று கூறிய அவர் இனிமேல் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக வரும் புகார்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பேராசிரியரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானால் துணைவேந்தரிடம் நேரடியாக புகார் தெரிவிக்கலாம் என்றும் சீனிவாசன் கூறியுள்ளது மாணவிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயத்தில் எந்த காரணத்தை கொண்டு பேராசிரியர்களோ, விரிவுரையாளர்களோ தங்கள் இல்லங்களுக்கு மாணவிகளை அழைக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.
இது போல் அறிவிப்பு வெளியிடுவதால் மாணவிகள் தவறாக வழிநடத்தப்படுவது தடுக்கப்படும் என்றும் இது போன்ற அறிவிப்புகள் ஆராய்ச்சிப் படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்றும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர் .
இவ்வளவும் சொல்லிவிட்டு கல்வி தொடர்பாக மாணவிகளை பேராசிரியர்கள் வெளியில் அழைத்துச் செல்வதாகவோ, வெளியில் தங்குவதாகவோ இருந்தால் பல்கலைக்கழகத்தில் முன் அனுமதி பெற வேண்டும் என கூறியது சிலரை முகம் சுளிக்க வைத்துள்ளது.
அனுமதி பெற்று அழைத்து செல்லும்போது கட்டுப்பாடுடன் பேராசிரியர்கள் இருப்பார்களா என நெட்டிசன்கள் கேலி செய்கிறார்கள். அது சரி பேராசிரியர்கள் வீட்டிற்கு அழைத்தால் ஆண் மாணவர்கள் செல்லலாமா அல்லது பெண் பேராசிரியர்கள் வீட்டிற்கு ஆண் மாணவர்கள் செல்லலாமா என்றெல்லாம் கேட்காதீர்கள். அந்த அளவுக்கு நம் நாட்டில் கலாச்சாரம் சீரழிந்து விட்டதாக தெரியவில்லை.
சில பள்ளிகளில் தங்களை விட வயது குறைவான ஆண் மாணவர்களை தன் ஆசைக்கு இணங்க வைத்ததாக பெண் ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைதானது உங்களுக்கு நினைவுக்கு வந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.