அடுத்தடுத்த அவமானங்கள்! சென்னை திருநங்கைகள் ஒன்று சேர்ந்து செய்த வாய்பிளக்க வைக்கும் செயல்!

சென்னை: அவமானங்களில் இருந்து பாடம் கற்றேன், என்று டிடிபி மையம் நடத்தி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் திருநங்கை சுவேதா கூறியுள்ளார்.


இந்தியாவிலேயே முதல்முறையாக, சென்னையில் திருநங்கைகள் நடத்தும் டிடிபி மற்றும் கம்யூனிகேஷன் சென்டர் தொடங்கப்பட்டுள்ளது. இதனை சாதிக்கப் பிறந்தவர்கள் சமூக அமைப்பு (born2win) எனும் என்ஜிஓ அமைப்பு நிறுவியுள்ளது. இந்த அமைப்பின் நிறுவனர் திருநங்கை சுவேதா. இவர், இதுவரையிலும் 100க்கும் அதிகமானோருக்கு பல்வேறு வேலைவாய்ப்பு உதவிகளை வழங்கியுள்ளார். இதில் ஒன்றுதான் சமீபத்திய டிடிபி மையம் திறக்கப்பட்ட நிகழ்வும்.  

இதுபற்றி திருநங்கை சுவேதா கூறுகையில், ''சென்னையில் பிறந்து வளர்ந்த நான் சிறுவயதில் இருந்தே சமூகப் பணிகளில் அதிக ஆர்வம் கொண்டிருந்தேன். எனினும், எனக்கிருந்த உடல் மாற்றத்தால் சுற்றியிருப்பவர்கள் என்னை மிகவும் அவமானப்படுத்தினார்கள். இந்த சமூகத்தால் ஒதுக்கப்பட்டேன்.

இப்படி நான் சந்தித்த அவமானங்களில் இருந்து, என்னைப் போன்றவர்களுக்கு உதவி செய்வது எனும் லட்சியம் ஏற்பட்டது. அவமானத்தில் இருந்து பாடம் கற்ற நான், என்னைப் போன்றவர்களுக்கு தேவையான கல்வி, வேலைவாய்ப்பு செய்துதரும் வகையில் இந்த சமூக அமைப்பை நிறுவி சேவை செய்துவருகிறேன்,'' எனக் குறிப்பிட்டுள்ளார்.