பட்டுப்புடவை திருட டெல்லி டூ சென்னை கார் பயணம்! CCTVக்கே சவால் விடும் சில்க் பெண்கள்!

சென்னை தி நகரில் பிரபலமான ஜவுளி சோரூமில் விலை உயர்ந்த பட்டுபுடைவைகளை திருடி விட்டு தப்ப முயன்ற கும்பல் சிக்கியது, விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.


சென்னை வடக்கு உஸ்மான் ரோடில் பிரபலமான ஜவுளி சோரூமில் நுழைந்த 6 பேர் கொண்ட வட மாநில குழு விலையுர்ந்த பட்டுபுடவைகளை திருடிவிட்டு தப்ப முயன்ற போது கையும் களவுமாக சிக்கினர். நேற்று இரவு கடைக்குள் 4 பெண்கள் இரண்டு ஆண்கள் என டிப் டாப்பாக உடையணிந்து, வந்து விலை உயர்ந்த பட்டு புடவைகளை பார்ப்பது போல சல்வாருக்குள் ஓளித்து வைத்து கொண்டு செல்ல முயன்ற போது, சிக்கினர்.

மேலும் இது குறித்து தகவல் அளிக்கபட்டு பாண்டி பஜார் காவல்துறையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வட மாநிலத்தை சேர்ந்த ராம்குமார் (வயது 40), ரிங்குசிங் (35), பீனா (53), ஜோதி (48), சுனிதா (26), தீபாஞ்சலி (21) என ஆறு பேர் கொண்ட குழு இந்த சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

மேலும் வழக்கமாக சம்மர் டிரிப் போல இந்த கொள்ளை சம்பவத்தில் ஆண்டு தோறும்  ஈடுபடுவதாக கூறினார். இதற்காக டெல்லியில் இருந்து காரிலேயே இந்த கும்பர் சென்னை வருவதை வழக்கமாக கொண்டுள்ளது.

மேலும் விசாரணையில் இதற்கு முன்னரே,  2,22,369 ரூபாய் மதிப்புள்ள 3 பட்டுச் சேலைகளை மற்றொரு கடையில் திருடியதும் அதை காரில் வைத்து விட்டு இந்த கடைக்குள் 1,41,010 ரூபாய் மதிப்புள்ள 3 பட்டுச் சேலைகளைத் திருடியுள்ளது அம்பலமானது. மேலும் இவர்களது பின்னனி குறித்து டெல்லி போலீசாரிடம் தகவல் கேட்டுள்ளதாகவும் காவல் துறையின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த கும்பலை சில்க் கும்பல் என்று கூறுகிறார்கள். கடைகளில் பட்டுப்புடவைகளை மட்டுமே இவர்கள் குறி வைப்பார்கள். விலை உயர்ந்த பட்டுப்புடவைகளை திருடி அவற்றை வேறு இடங்களில் விற்பனை செய்துவிட்டு மஜா செய்வது தான் இவர்களின் வேலையாம்.