மு.க.ஸ்டாலின் பேரணியில் ஸ்தம்பித்த சென்னை! குடியுரிமை சட்டத்திற்கு எதிராக குடிமக்களும் முழக்கம்!

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாபெரும் பேரணி நடைபெற்றது.


இதில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியினரும் பங்கேற்று தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர். சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் இருந்து ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை இந்த மாபெரும் பேரணி நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்திய இந்தப் பேரணியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன், கனிமொழி, தயாநிதி மாறன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும், கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்காணோர் கலந்து கொண்டு மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

குடியுரிமை சட்டத்திருத்தத்தால் இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கை அகதிகள் பாதிக்கப்படுவதாக கூறி அந்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தி தொண்டர்கள் முழக்கங்கள் எழுப்பினர். எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் இருந்து ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை பேரணி நடைபெற்றது. இதற்காக அங்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு மாற்றுப் பாதையில் அனுமதிக்கப்பட்டது. 

பேரணியில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றதால் முன்னெச்சரிக்கையாக போதுமான அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. 2 கூடுதல் ஆணையர், 12 துணை ஆணையர்கள் உள்பட 5,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆளில்லாத விமானம் என கூறப்படும் ட்ரோன்கள் மூலம் பேரணியை காவல்துறையினர் கண்காணித்தனர்.

ஒருவேளை அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதை தடுக்கும் பொருட்டு 6 கலவர தடுப்பு வாகனங்கள், 3 தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிந்தன.