நட்சத்திர ஓட்டலில் தகாத செயல்! 2 பெண்களை வெளியேற்றிய பவுன்சர்கள்! உண்மையில் நடந்தது என்ன?

நட்சத்திர ஓட்டலில் இரண்டு பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் வரம்பு மீறியதாக கூறி பவுன்சர்களால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.


கடந்த சனிக்கிழமை அன்று ஓரினச் சேர்க்கையாளர்களான ராசிகா மற்றும் ஷிவாங்கி சென்னை காதர் நவாஸ் கான் சாலையில் உள்ள ஸ்லேட்டர் எனும் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அங்குள்ள பப்பில் இருவரும் உற்சாகமாக பொழுதை கழித்துள்ளனர்.

பப்பில் இசைத்த இசைக்கு ஏற்ப ராசிகாவும் – ஷிவாங்கியும் உற்சாகமாக நடனம் ஆடினர். ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு கட்டி அணைத்துக் கொண்டும் இருவரும் உற்சாகமாக இருந்தனர். 

அப்போது பப்பில் இருந்த மற்ற ஜோடிகள் இவர்கள் இருவரையுமே பார்த்துள்ளனர். மேலும் பவுன்சர்களும் ஷிவாங்கி – ராசிகா ஜோடியை வைத்த கண் வாங்காமல் பார்த்துள்ளனர்.

இதனால் அசவுகரியமாக உணர்ந்த இருவரும் ரெஸ்ட் ரூம் சென்றுள்ளனர். உடனடியாக ஒரு பெண் ஊழியருடன் சிலேட்டர் ஓட்டல் பவுன்சர்கள் சென்று பாத்ரூம் கதவை தட்டியுள்ளனர்.

இருவரும் ஒரே பாத்ரூமில் என்ன செய்கிறீர்கள் என பவுன்சர் கேட்டுள்ளார். அதற்கு தனது தோழிக்கு உடல் நிலை சரியில்லை அதனால் உதவி செய்வதாக ராசிகா கூறியுள்ளார். 

ஆனால் இதனை ஏற்க மறுத்த பவுன்சர்கள், இருவரும் தகாத செயலில் ஈடுபடுவதாக கூறி விரட்டியுள்ளனர். தங்களுக்கு சிலேட்டர் ஹோட்டலில் நேர்ந்த சம்பவம் குறித்து ராசிகா தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.

ஓரினச் சேர்க்கையாளர்களாக இருந்தாலும் பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தங்களுக்கு தெரியும் என்று அதில் கூறியுள்ளார். மற்ற ஜோடிகளை போலவே தாங்களும் கட்டி அணைத்து நடனம் ஆடியதாகவும் அதில் ஆபாசம் எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

வேண்டும் என்றால் ஓட்டலின் கேமராவை கூட செக் செய்து கொள்ளலாம் என்று ராசிகா தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நடந்தவற்றுக்கு சிலேட்டர் ஓட்டல் நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.