கல்விக் கட்டணம் செலுத்த வழியில்லை! தேர்வு எழுதாமல் தவித்த 16 மாணவர்கள்! காவல் ஆணையர் செய்த நெகிழ்ச்சி செயல்!

சென்னையில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வந்த 16 மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ள சென்னை காவல் ஆணையருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


சென்னை வேப்பேரி பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் பத்தாவது மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் 16 பேர் கல்வி கட்டணம் செலுத்தவில்லை. ஆதலால், அவர்கள் காலிறுதி ஆண்டு தேர்வு எழுத முடியாமல் தவித்து வந்தனர். 

இதனை அறிந்து கொண்ட சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உடனடியாக மாணவர்கள் தேர்வு எழுத உரிய நடவடிக்கைகளை எடுத்ததால் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

பின்னர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு ஆணையர் ஜெயலட்சுமி, தொண்டு நிறுவனத்தை அணுகி உதவுமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க, தனியார் தொண்டு நிறுவனம் சுமார் ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாயை பள்ளி முதல்வரிடம் ஒப்படைத்தது. 

மாணவர்களுக்கு உரிய நேரத்தில் உதவிக்கரம் நீட்டி, அவர்களின் எதிர்காலத்திற்கு உரிய நடவடிக்கை எடுத்ததற்காக காவல்துறை ஆணையருக்கும், ஜெயலட்சுமிக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.