ஜலகண்டேஸ்வரர் கோவில் லிங்கத்தை திருடிவிட்டார் நித்யானந்தா! வீடியோ ஆதாரத்துடன் போலீஸ் ஸ்டேசன் சென்ற மக்கள்!

சென்னை: ஜலகண்டேஸ்வரர் சிலையை கடத்தியதாகக் கூறி, நித்தியானந்தா மீது போலீஸ் புகார் தரப்பட்டுள்ளது.


பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றவர் நித்தியானந்தா. தன்னை சாமியார்  எனக் கூறிக் கொண்டே அனைத்துவித உல்லாசங்களையும் வாழ்வில் அனுபவித்து வரும் நித்தியானந்தா, தன் பேச்சைக் கேட்டுத்தான் சூரியனே உதிக்கும், கடல் பொங்கும் என்றெல்லாம் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதும் வழக்கம்.

இவரும், நடிகை ரஞ்சிதாவும் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதும் இங்கே குறிப்பிட வேண்டிய விசயமாகும். இந்நிலையில், சில நாள் முன்பாக, நித்தியானந்தா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ''மேட்டூர் அணை உள்ள பகுதியில் முன்னர் அமைந்திருந்த ஜலகண்டேஸ்வரர் கோயிலை போன ஜென்மத்தில் நான்தான் கட்டினேன். அந்த கோயிலின் மூலவர் சிலை தற்போது என்னிடம்தான் உள்ளது,'' எனப் பேசியுள்ளார்.   

 இதையடுத்து, நித்யானந்தா மீது ஜலகண்டேஸ்வரர் கோயில் சிலையை திருடியதாகக் கூறி, பாலவாடி பகுதியை சேர்ந்த வேலுசாமி, சக்திவேல் ஆகியோர் கொளத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் அந்த சிலை தன்னிடம் உள்ளதாக நித்யானந்தாவே கூறிய வீடியோவையும் அவர்கள் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளனர். நித்யானந்தா திருடிய லிங்கத்தை மீட்டு தரும்படி அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  

மேட்டூர் அணைக்கு நீர் வந்தால் அதில் ஜலகண்டேஸ்வரர் கோயில் மூழ்கிவிடும். அணையில் நீர் வற்றினால் அதில் உள்ள கோபுரம், கோயில் கட்டிடம், நந்தி சிலை உள்ளிட்டவை சிதிலமடைந்த நிலையில் வெளியில் தெளிவாக தெரியும். அணை கட்டுவதற்காக, பிரிட்டிஷார் ஆட்சியில் அந்த கோயிலை சுற்றி அமைந்திருந்த குடியிருப்புகள் அகற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.