அட்ரஸ் கேட்கும் ஆண்கள் அதற்கு குறி வைப்பார்கள்! பெண்களே உஷார்! எச்சரிக்கும் கீர்த்தன்யா!

அட்ரஸ் கேட்பது போல் காரை தடுத்து நிறுத்திய நபர் பெண்ணிடம் செய்தது என்ன? அதிர்ச்சி வீடியோ


சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் முகவரி கேட்பது போல் காரை வழிமறித்து நகை பறிக்க முயன்ற சி.சி.டி.வி. காட்சி வெளியாகியுள்ளது. பெண் காரை நிறுத்தி கண்ணாடியை இறக்கிய போது காருக்குள்ளும் அந்தப்பெண்ணையும் நோட்டமிட்ட நபர் நகைகள் இல்லையா எனக் கடுமையான வார்த்தைகளில் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அந்த நபரை பிடிக்க முற்பட்ட போது அந்த நபர் கண் இமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்று தப்பிய காட்சிகள் சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளன.

முகநூல் பதிவு மூலம் அந்தப்பெண் மனவள ஆலோசகர் கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி என தெரியவந்துள்ளது. பெருங்குடியிலிருந்து அந்த இருசக்கர வாகனம் தன்னை பின் தொடர்ந்ததாக தெரிவித்துள்ள அவர்,  தான் பொதுவாக தங்க நகைகள் அணிவதில்லை என்பதால் அசம்பாவிதத்தில் இருந்து தப்பியதாக தெரிவித்துள்ளார். 

அந்த நபரைப் பிடிக்கக் கோரி தான் கூச்சலிட்ட நிலையில் யாரும் உதவிக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ள அவர், இதையடுத்து, தான் அருகில் இருந்த கடைக்குச் சென்று சி.சி.டி.வி. கேமரா பதிவை வாங்கியதாகவும், ஆனால் தூசி காரணமாக பதிவுகள் தெளிவின்றி இருந்ததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

ஆனால் மற்றவர்களுக்கு இதுபோல நடப்பது தெரிய வேண்டும் என்பதால் முகநூலில் பதிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சூழல்களில் பெண்கள் கவனமுடன் இருக்கவும், பொதுமக்களும் உதவ முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.