ரூ.37 ஆயிரம் கோடி மதிப்புள்ள முருகப்பா குழுமம் யாருக்கு? வலுக்கும் குடும்பச் சண்டை..! வள்ளி அருணாச்சலத்தை வெளியேற்ற சதி?

சென்னை: முருகப்பா தொழில் குழுமத்திற்குள் குடும்ப சண்டை வலுத்துள்ளதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


சென்னையை சேர்ந்த முருகப்பா குழுமம், கடந்த 119 ஆண்டுகளாக பல்வேறு விதமான தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. இக்குழுமத்தின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.37,000 கோடி என மதிப்பிடப்படுகிறது. இக்குழுமத்தின் புரவலராக அம்பாடி இன்வெஸ்ட்மென்ட்ஸ் எனும் நிறுவனம் செயல்படுகிறது. இந்நிலையில் முருகப்பா தொழில் குழுமத்தின் பொதுக் குழுவில் மறைந்த தொழிலதிபர் முருகப்பாவின் மூத்த மகள் வள்ளி அருணாச்சலம் இடம்பிடித்துள்ளார். அவர், மொத்த பங்குகளில், 8.15 சதவீத பங்குகளை தன்வசம் பெற்றுள்ளார்.  

ஆனால், வள்ளியின் வருகையை அவர்களது தொழில் குடும்பத்தில் மூத்தவராக உள்ள சுப்பையா விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. முருகப்பா மறைவை தொடர்ந்து, அவரது குடும்பம் மற்றும் தொழில் பணிகள் என அனைத்தையும் சுப்பையாதான் முன்னின்று நிர்வகித்து வருகிறார். இந்நிலையில், முருகப்பாவின் நேரடி வாரிசு தனக்குப் போட்டியாக வருவதை சுப்பையா விரும்பவில்லை.

எனவே, வள்ளி தனக்குச் சொந்தமான பங்குகளை விற்றுவிட்டு வெளியேறும்படி சுப்பையா நெருக்கடி கொடுக்கிறாராம். இது மட்டுமின்றி, வள்ளி அருணாச்சலமும், முருகப்பா நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ளதை மறுக்கும் வகையில் இதுவரை குழுமம் சார்ந்த வெப்சைட் மற்றும் இதர ஆவணங்களில் அவரது பெயரை வெளியிடாமல் வைத்துள்ளதாக, பிசினஸ் ஸ்டேண்டர்டு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.  

முருகப்பா குழுமத்தின் புரவலரான அம்பாடி இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில், உறுப்பினராக இருக்க தகுதி படைத்தவர்கள் ஆண்கள் மட்டுமே என்று, முருகப்பா குடும்பத்தினர் கருதுகின்றனர். ஆனால், முதல்முறையாக இதில் ஒரு பெண் உறுப்பினராக வள்ளி இடம்பெற முயற்சித்து வருகிறார்.

இதுதான் பிரச்னைக்கு முக்கிய காரணமாகும். ஆனால், இதுபற்றி வள்ளி கூறும்போது, ''எனது தந்தையின் விருப்பப்படி, எனது தங்கை, அம்மா உள்ளிட்டோரின் சார்பாக நான் இந்த குடும்ப தொழிலில் ஈடுபட விரும்புகிறேன். பெண்களுக்கு சம உரிமை தரப்படாததை எதிர்த்து நடக்கும் மோதல்தான் இது,'' என்கிறார்.