சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள மருத்துவமனை அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீர் தீப்பற்றியதில் மின் துண்டிப்பு ஏற்பட்டு நோயாளிகள் பலர் முறையான சிகிச்சை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
சுந்தரம் பவுண்டேசன் ஹாஸ்பிடல் அருகே திடீர் தீ! டிரான்ஸ்பார்மர் வெடித்தது! ஜெனரேட்டரும் ரிப்பேர்! நோயாளிகளின் திக்திக் மனநிலை!
சென்னையில் நேற்று பெய்த கனமழையால் முகப்பேர் மருத்துவமனை அருகே இருந்த டிரான்ஸ்பார்மரில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பற்றியது. இதைக்கண்டு பதட்டம் அடைந்த பலர் அருகில் இருந்த தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் மின் துண்டிப்பு ஏற்பட்டது.
மருத்துவமனையிலும் மின் துண்டிப்பு ஏற்பட்டதால் சில மணி நேரத்திற்கு ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பிறகு ஜெனரேட்டர் செயல் இழக்கவே நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
அவசர சிகிச்சை பிரிவில் இருந்த சில நோயாளிகள் ஆம்புலன்ஸ் மூலம் வேறு பகுதியில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். சில கர்ப்பிணி பெண்களும் இந்த மின் துண்டிப்பால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.