திடீரென வெடித்த பைக்..! ரிப்பேர் பார்த்துக் கொண்டிருந்த மெக்கானிக் முகத்தில் பற்றி எரிந்த தீ!

சென்னையில் இரு சக்கர வாகனத்தை பழுது பார்த்துக் கொண்டிருக்கும்போது எஞ்சினில் இருந்து வந்த தீ மெக்கானிக்கின் முகத்தில் பரவியது.இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.


சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் குமார் இவர் அதே பகுதியில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அவரது கடைக்கு ஸ்டார்ட்டிங் டிரபுள் பழுதுபார்த்து தருமாறு வாடிக்கையாளர் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தை விட்டுச் சென்றுள்ளார்.

மெக்கானிக் குமார் அந்த வாகனத்தை பழுது பார்த்துக் கொண்டிருக்கும்போது வாகனத்தை செல்ஃப் ஸ்டார்ட் செய்து பரிசோதித்துள்ளார். இந்நிலையில் திடீரென வாகனத்தின் என்ஜினில் தீப்பற்றியது. தீ மளமளவென பற்றியுள்ளது. இதையடுத்து வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த குமாரின் முகத்திலும் தீ பரவியது உடனே அதை சுதாரித்த குமார் ரோட்டோரத்தில் தங்கியிருந்த மழைநீரில் உடனே வந்து முகத்தை கழுவியுள்ளார்.

இதையடுத்து பெரும் விபத்திலிருந்து குமார் தன்னை காத்துக்கொண்டார்.பின்னர் உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து சிசிடிவி கேமரா காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் குமார் வாகனத்தை ஸ்டார்ட் செய்து வாகனத்தின் பின்னால் பழுது சரி செய்து கொண்டிருக்கும் போது திடீரென ஏற்பட்ட தீ அவரது முகத்தில் பரவியது தெளிவாக பதிவாகியிருந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.