சதுரங்கவேட்டை பாணியில் பணம் சம்பாதிக்க முயன்ற வாலிபர் - காதலியும் போச்சு, வருமானமும் போச்சு.

உழைக்காமல் குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாகிவிடலாம் என்று நினைக்கும் சிலர் சதுரங்கவேட்டை பாணியில் ஏமாறுவதும் பின்னர் விரக்தியில் தற்கொலை செய்துகொள்வதும் வாடிக்கையாகி போய்விட்டது.


இதுபோன்றவர்களை தேடிப்பிடித்து கண்டுபிடித்து ஏமாற்றுவதற்காக உலகம் முழுவதும் நிறைய விஷக்கிருமிகள் காலம் காலமாய் இருந்துகொண்டேதான் இருக்கின்றன.

அந்த வகையில் சென்னை சின்ன நீலாங்கரையை சேர்ந்த ரஞ்சித்குமார் க்யூநெட் எனும் நிறுவனத்தில் பல லட்ச ரூபாய் பணத்தை இழந்ததோடு மட்டுமல்லாமல் தன்னுடைய காதலியை இழந்து விரக்தியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சென்னையில் எலக்ட்ரிசியனாக பணிபுரிந்துவந்த ரஞ்சித்குமார் சிதம்பரத்தில் வசிக்கும் உறவினர் பெண்ணான விஷ்ணுபிரியாவை காதலித்து வந்துள்ளார். சொந்த தொழில் நடத்தினால்தான் தன்னை திருமணம் செய்துகொள்ள முடியும் என்று ரஞ்சித்குமாருக்கு கட்டளை விதித்த விஷ்ணுபிரியா க்யுநெட் நிறுவனத்தில் தன்னுடைய உறவினர் பணிபுரிவதாகவும் குறைந்த முதலீட்டில் விரைவாக பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி அவரது உறவினர் சேதுராமனிடம், ரஞ்சித்குமாரை அறிமுகம் செய்துள்ளார்.

சேதுராமனை நம்பிய ரஞ்சித்குமார் ரூ.8 லட்சம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். ஆனால் கடந்த ஒரு வருடமாகியும் முதலீடு செய்த பணமும் வராத நிலையில் எந்த கூடுதல் பணப்பலன்களும் ரஞ்சித்குமாருக்கு கிடைக்கவில்லை. இதுகுறித்து சேதுராமனிடம் ரஞ்சித்குமார் கேட்டபோது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், பணம் வேண்டுமென்றால் வேறு யாராவது அறிமுகம் செய்து வைக்கவேண்டும் என மீண்டும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதை நம்பிய ரஞ்சித்குமார் ரூ.2 லட்சம் கடன் வாங்கி சேதுராமனிடம் கொடுத்துள்ளார். அதன்பின்னரும் பணம் வராத நிலையில் ரஞ்சித்குமார் கிட்டதட்ட அனைத்தையும் இழந்து கடனில் சிக்கி தவிப்பதை பார்த்த விஷ்ணுபிரியா நைசாக ரஞ்சித்குமாரிடம் விலகி சென்றுவிட்டார். பணத்தையும், காதலியையும் இழந்த ரஞ்சித்குமார் கடனை அடைக்க முடியாமல் விரக்தியில் இருந்துள்ளார். விரக்தியின் உச்சக்கட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் ரஞ்சித்குமார்,

இதுபோன்ற விஷக்கிருமிகளிடம் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள ஒரே வழி….. எங்கிட்ட காசு இல்லப்பா…. வேணுன்னா எனக்காக நீயே பணம் போடு. வருமானம் வந்தால் தருகிறேன் என்று சொல்லி தப்பித்துக்கொள்ளலாம்.