லயோலா கல்லூரியில் திருநங்கை மாணவி படைத்த புதிய சாதனை! குவியும் வாழ்த்து!

சென்னை: லயோலா கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் வென்றுள்ள திருநங்கை நளினா பிரசிதாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.


இந்திய வரலாற்றிலேயே திருநங்கை ஒருவர், கல்லூரி மாணவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளது இதுவே முதல்முறையாகும். மாணவி நளினா பிரசிதா, தற்போது லயோலா கல்லூரியில் முதுகலை விஸூவல் கம்யூனிகேசன்ஸ் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

இதன்படி, கல்லூரி மாணவர் பேரவை தேர்தலில், துணை செயலாளர் பதவிக்கு அவர் போட்டியிட்டு வென்றுள்ளார். இவரது சாதனை, திருநங்கைகள் மட்டுமின்றி, சமூக ஆர்வலர்கள், பல தரப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கும் புதிய உந்துதலாக அமைந்துள்ளது. 

திருநங்கை நளினா பிரசிதா வெற்றிக்கு, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல, பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருநங்கைகள் வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

சமூக ஊடகங்களில் இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது.