நம்பி என் மகளை நித்தியானந்தாவிடம் அனுப்பி வைத்தேன்..! ஆனால்..! கதறும் திருச்சி பெண்மணி!

சென்னை: நித்யானந்தா எங்களை மோசடி செய்துவிட்டார் என்று, பெண் ஒருவர் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.


திருச்சி நாவலுர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான்சிராணி. இவருக்கு 3 மகள்கள். அவர்களில் மூத்த மகள்  அம்மை நோயால் உயிரிழந்த நிலையில், 2வது மகளுக்கு வாய், காது இயங்காது. 3வது மகள் மட்டுமே குடும்பத்தை பராமரித்து வந்தார். இளம் வயதிலேயே குடும்ப சுமை என்பதால் சிறுமி சிவசங்கரிக்கு கடும் மன அழுத்தம் ஏற்படவே, அதனை சரிசெய்துகொள்வதற்காக, நித்தியின் தியான வகுப்புகளுக்குச் செல்ல ஆரம்பித்தார்.  

படிப்படியாக, 2010ம் ஆண்டில் நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் முக்கிய நிர்வாகியாக பதவி உயர்வுபெற்றார். இதற்கிடையே, டீன் ஏஜ் வயதை அவர் கடந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதியன்று மர்மமான முறையில் நித்யானந்தா ஆசிரமத்தில் இறந்து கிடந்தார். இதுபற்றி அவரது தாய் ஜான்சிராணி போலீசில் புகார் தர, அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். எனினும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறும் ஜான்சிராணி, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றவும் வலியுறுத்தி வருகிறார்.  

தற்சமயம் நித்யானந்தா மீண்டும் பல்வேறு மோசடி புகார்களில் சிக்கி தேடப்படும் குற்றவாளியாக மாறியுள்ளார். இந்நிலையில், ஜான்சிராணி, தனது வேதனையை மீண்டும் தமிழ் உலகிற்கு நினைவுபடுத்தியுள்ளார். இதுபற்றி வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், ''நித்யானந்தாவை முழுமையாக நம்பித்தான் எனது மகள் சிவசங்கரியை அனுப்பி வைத்தேன். சாகும்போது, அவளுக்கு 24 வயது. மாரடைப்பில் இறந்தார் எனக் கூறி வழக்கை மூடுவதற்காக, நித்யானந்தா தரப்பில் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

எனது மகளின் உடலில் உள்ளுறுப்புகள் எதுவும் இல்லை என, பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர். மாரடைப்பால் இறந்தவரின் உடல் உறுப்புகள் எப்படி மாயமாகும், இதில் பெரிய சதி உள்ளதாக சந்தேகிக்கிறோம். நித்யானந்தா எங்கள் குடும்பத்தை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார். இந்த வழக்கை சிபிஐ வசம் மாற்றி, விசாரித்தால் நிறைய உண்மை வெளிவரும். எங்களின் மகள் சாவுக்கு நிச்சயம் ஒருநாள் நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்,'' என பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.  

நாளுக்கு நாள் இப்படி புதுப்பு புகார்கள் கிளம்புவதால், நித்யானந்தா விரைவில் சிறைக்குச் செல்வது உறுதி என்று, அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.