சென்னை கிண்டியில் ஐந்து நட்சத்திர விடுதிக்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற ஒருவர் மின்தூக்கிக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் எஸ்கலேட்டரை பயன்படுத்தியபோது தவறி விழுந்து பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார்.
தவறி விழுந்த நண்பர்! காப்பாற்ற முயன்ற 74 வயது நபர்! நொடியில் நேர்ந்த விபரீதம்! ஹில்டன் ஹோட்டல் எஸ்கலேட்டர் பயங்கரம்!
சென்னை எழும்பூர் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் ஜக்டியானி என்பவர். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்னை கிண்டி அருகே உள்ள ஐந்து நட்சத்திர விடுதிக்கு நண்பருடன் வந்துள்ளார் ரமேஷ் ஜக்டியானி. அப்போது அவர் எஸ்கலேட்டரில் ஏறும்போது அவருடன் வந்த நண்பர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக அவரை காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய ரமேஷ் ஜக்டியானியும் கீழே தவறி விழுந்தார்.
இந்த எஸ்கலேட்டர் விபத்தில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஓட்டல் நிர்வாகத்தினர் அனுமதித்தனர். அங்கு 2 பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள் ரமேஷ் ஜக்டியானி ஏற்கெனவே உயிரழந்து விட்டதாக தெரிவித்தனர். அவருடைய நண்பருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இது குறித்து கிண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுவாக எஸ்கலேட்டர் பயணம் அனைத்து வயதினருக்கும் உகந்தது அல்ல. 10 வயதுக்குள் உள்ள சிறுவர்களும் வயோதிகத்தை அடைந்தவர்களும் அடுத்தவர் உதவியுடன்தான் செல்ல வேண்டும். அல்லது படிக்கட்டு அல்லது மின் தூக்கியை பயன்படுத்தி செல்வது நல்லது. ஏன் என்றால் எஸ்கலேட்டர் இயங்க ஆரம்பித்து விட்டால் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை இயங்கிக் கொண்டே இருக்கும்.
அவசரமாக நிறுத்த வேண்டும் என்றால் எஸ்கலேட்டரின் மேல் புறம், நடுப் பகுதி, கீழ்ப் பகுதியில் ஒரு சுவிட்ச் வைத்து இருப்பார்கள் அதை அழுத்தினால் உடனடியாக எஸ்கலேட்டர் நின்று விடும். ஆனால் இந்த விஷயம் எஸ்கலேட்டரை பயன்படுத்தும் பெரும்பாலான மக்களுக்கு தெரியாது.
மேலும் இந்த எஸ்கலேட்டர் விபத்தில் உயிரிழந்த ரமேஷ் ஜக்டியானிக்கு வயது 74 என கூறப்படுகிறது. வயோதிக நிலையை அடைந்து விட்ட 74 வயதான ரமேஷ் ஜக்டியானி தன்னுடைய உடல்நிலையை மனதில் வைத்து எஸ்கலேட்டர் பயன்படுத்தாமல் மின்தூக்கி அல்லது படிக்கட்டு பயன்படுத்தி இருந்திருந்தால் உயிரிழப்பை தவிர்த்து இருக்கலாம்.
எஸ்கலேட்டர் விபத்தால் எப்படி எல்லாம் உயிரிழப்பு விபத்து ஏற்படும் என்பதை யூடியூப்பில் பார்த்தால் அதை பயன்படுத்துபவர்கள் இனிமேலாவது எச்சரிக்கையுடன் இருக்கலாம்.