2 நாட்களாக செல்ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்! பூட்டிக் கிடந்த வீடு! மாயமான பெண் மருத்துவர்! பெற்றோருக்கு வந்த அதிர்ச்சி தகவல்!

போலீசாரால் தேடப்பட்டு வந்த பயிற்சி பெண் மருத்துவர் தனது காதல் கணவருடன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.


சென்னை மந்தைவெளியில் இளங்கோ ஆண்டாள் தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களது மகள் சுபாஷினி ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ். படித்து முடித்து விட்டு புதுவை மாநிலம் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். புதுவை விக்னேஷ்வரா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வீடு எடுத்து தங்கி மருத்துவமனைக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் டாக்டர் சுபாஷினிக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். ஆனால் அதற்கு சுபாஷினி மறுப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்னர் மகள் சுபாஷினியை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் பயந்து போன பெற்றோர் சென்னையில் இருந்து புதுவைக்கு சென்று பார்த்தபோது அவர் தங்கி இருந்த வீடு பூட்டு போடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மருத்துவமனை சென்று சுபாஷினியை தேடியபோதும் 2 நாட்களாக வேலைக்கு வரவில்லை என மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்ததால் மேலும் அச்சமடைந்தனர்.

இதை அடுத்து மகள் சுபாஷினி காணவில்லை என புதுச்சேரி மாநிலம் கோரிமேடு போலீஸ் நிலையத்தில் ஆண்டாள் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன சுபாஷினியை தேடி வந்தனர். 

இந் நிலையில் புதுச்சேரி நீதிமன்றத்தில் சுபாஷினி நேற்று திடீரென ஆஜர் ஆனார். அவருடன் அவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட புத்துப்பட்டு பகுதியை சேர்ந்த அகிலனும் ஆஜரானார். அப்போது சுபாஷினி நீதிபதியிடம் கூறுகையில், நானும், அகிலனும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தோம்.

இது பற்றி தெரிவித்தபோதும் எங்களுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் சம்மதிக்க வில்லை. எனவே ஆகஸ்ட் 28-ந் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டோம் என்றார். அதன்பின், அவர்கள் இருவரையும் கோரிமேடு போலீஸ் நிலையத்திற்கு செல்லும்படி நீதிபதி அறிவுறுத்தினார்.

அதையடுத்து கோரிமேடு போலீஸ் நிலையத்திற்கு சுபாஷினி, அகிலன் ஆகியோர் சென்றனர். போலீஸ் நிலையத்தில் சுபாஷினி, தான் அகிலனுடன் செல்ல விரும்புவதாக கூறினார். அதையடுத்து சுபாஷினியின் விருப்பப்படி அவரை அகிலனுடன் அனுப்பி வைத்து வழக்கை முடித்து வைத்தனர்.