16 வயது சிறுவனை மகனுடன் சேர்ந்து கொடூர கொலை செய்த பாஜக பிரமுகர்! அதிர வைக்கும் காரணம்!

சென்னை குரோம்பேட்டையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கத்தியால் குத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.


பம்மல் நாகல்கேணி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர் விக்னேஷும் கல்லூரி மாணவர் நந்தாவும் வெள்ளிக்கிழமை இரவு குரோம்பேட்டையில் நடைபெற்ற மாதா கோவில் திருவிழாவிற்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர். இரவில் அவர்கள் சென்றபோது நடுவழியில் மறித்து ஒருவர் நின்று உள்ளார்.

அவரை நகரச் சொல்லியும் நகராததால் கையைப் பிடித்து இழுத்து தள்ளிவிட்டு அந்த இருவரும் சென்றுள்ளனர். திருவிழா முடிந்து மீண்டும் அதே வழியில் திரும்பியபோது, கீழே தள்ளிவிடப்பட்ட நித்தியானந்தம் என்ற இளைஞர் தனது தந்தை மதன் என்பவருடன் அங்கு நின்றிருந்தார். இருசக்கர வாகனத்தில் வந்த விக்னேஷ் மற்றும் நந்தா ஆகிய இருவரையும் தந்தையும் மகனும் சேர்ந்து இரும்பு கம்பி மற்றும் கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமுற்று ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த இருவரையும் மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். நந்தாவுக்கு 9 தையல் போடப்பட்டுள்ள நிலையில் கவலைக்கிடமான நிலையில் இருந்த விக்னேஷ் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சங்கர் நகர் போலீசார் மதன் மற்றும் நித்தியானந்தம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்களில் தந்தை மதன் என்பவர் பாஜகவில் நகரத் தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.