பெண்ணை வாடகைக்கு அமர்த்தி விபச்சார தொழில்! சென்னையில் சிக்கிய பலேபோலீஸ் ஏட்டு!

சென்னையில் பெண் ஒருவரை வாடகைக்கு அமர்த்தி விபச்சாரம் செய்து வந்த போலீஸ் ஏட்டு வசமாக சிக்கியுள்ளார்.


சென்னை அரும்பாக்கம் என்.எஸ்.கே 2வது தெருவை சேர்ந்தவர் ஜெயந்தி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அப்பகுதியில் பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். நேற்று இரவு இளைஞர் ஒருவரை தனது வலையில் வீழ்த்திய ஜெயந்தி என்.எஸ்.கே நகரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் ரூபாய் என்று பேரம் பேசி ஆசையுடன் சென்ற அந்த இளைஞருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது.

   ஜெயந்தி வீட்டுக்கு அந்த இளைஞர் சென்ற சில நிமிடங்களில் ஏட்டு ஒருவர் அங்கு வந்துள்ளார். தான் ரெய்டுக்கு வந்துள்ளதாகவும் விபச்சாரத்தில் ஈடுபட்டதால் இரண்டு பேரையும் கைது செய்யப்போவதாக கூறியுள்ளார் ஏட்டு பார்த்திபன். இதனை உண்மை என்று நம்பிய அந்த இளைஞர் தன்னை விட்டு விடும்படி கெஞ்சியுள்ளார். அப்படி என்றால் 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடு என்று கேட்டு வாங்கிவிட்டு ஏட்டு பார்திபன் அங்கிருந்து சென்றுவிட்டார்.   இதனை தொடர்ந்து வீட்டை விட்டு அந்த இளைஞர் வெளியேற முயற்சி செய்த போது தனக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துவிட்டு செல்லுமாறு ஜெயந்தி மிரட்டியுள்ளார். இருக்கும் பணத்தை எல்லாம் ஏட்டு வாங்கிச் சென்றுவிட்டதாகவும், மேலும் தான் ஒன்றுமே செய்யாத போது எப்படி பணம் கொடுக்க முடியும் என்றும் இளைஞர் தகராறு செய்துள்ளார். அப்படி என்றால் உன்னை என்ன செய்கிறேன் பார் என்று காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த ஜெயந்தி தனது வீட்டில் திருடன் வந்துள்ளதாக கூறியுள்ளார்.

   இதனை அடுத்து அங்கு சென்ற ரோந்து போலீசார் அந்த இளைஞனையும், ஜெயந்தியையும் அமைந்தகரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது ஜெயந்தி தன்னை விபச்சாரத்திற்கு அழைத்ததாகவும் ஆனால் ஏட்டு ஒருவர் ரெய்டுக்கு வந்து தன்னிடம் பணத்தை பறித்துவிட்டு சென்றுவிட்டதாகவும் அந்த இளைஞர் கூறியுள்ளார். ரெய்டுக்கு வந்தது யார் என்று அமைந்தகரை போலீசார் விசாரித்த போது, யாருமே ரெய்டுக்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது.

   இதனை அடுத்த விபச்சார அழகி ஜெயந்தியின் செல்போனை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அவர் கோயம்பேடு காவல் நிலைய தலைமைக் காவலர் பார்த்திபனுடன் செல்போனில் பேசியிருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் தங்கள் பாணியில் விசாரித்த போது தான் உண்மை தெரியவந்தது. ஜெயந்தி ஒரு பாலியல் தொழிலாளி என்பதும் அவர் கோயம்பேடு ஏட்டு பார்த்திபனுடன் சேர்ந்து செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.  சென்னை என்.எஸ்.கே நகரில் ஜெயந்தியை வாடகை வீட்டில் தங்க வைத்துள்ள ஏட்டு, வருமானத்தில் பாதியை வாங்கி வந்துள்ளார். மேலும் ஏமாந்த வாடிக்கையாளர் ஜெயந்தி வீட்டுக்கு வரும் போது அங்கு சென்று ரெய்டுக்கு வந்துள்ளதாக கூறி வாடிக்கையாளர்களிடம் மிரட்டி பணமும் பறித்துள்ளார். பின்னர் ஜெயந்தியும் – ஏட்டும் கிடைக்கும் பணத்தை பங்கு போட்டுக் கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து ஏட்டு பார்த்திபனை அழைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.