பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தீ... - தொடர்பு எல்லைக்கு அப்பால் செல்போன் இணைப்புகள்

சென்னையில் 60 டவர்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.த இதனால் வடசென்னையில் பி.எஸ்.என்.எல் சேவை பயன்படுத்தும் தொலைபேசி, இண்டர்நெட், செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு பாதிப்பு.


சென்னையில் மிக நெரிசலான பகுதிகளாக கருதப்படும் பகுதிகளில் மண்ணடியும் ஒன்று. ஆங்கிலேயர்கள் இங்கு அதிகம் வசித்ததற்கான அடையாளங்களாக இங்குள்ள பல தெருக்களில் அவர்கள் வைத்துவிட்டு சென்ற பெயர்கள் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. தென்சென்னையில் இருந்து வடசென்னைக்கு நாள்தோறும் சுமார் 5 லட்சம் பேராவது கடந்து செல்லும் பாலம் என்றே மண்ணடியை கூறலாம்.

இந்நிலையில் இங்கு செயல்பட்டு வரும் மத்திய அரசின் தொலை தொடர்பு நிறுவனமாக பாரத் சங்சார் நிகாம் லிமிடெட் (பி.எஸ்.என்.அல்) அலுவலகத்தில் திடீரென தீப்பிடித்தது. 5 மாடி கொண்ட அலுவலக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்து ராயபுரம், எழும்பூர், திருவல்லிக்கேணி, எஸ்பிளனேடு உள்ளிட்ட 10 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் 80 வீரர்கள் ஈடுபட்டனர்.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்தனர். 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தபோதும் அங்கிருந்த முக்கிய ஆவணங்கள், தளவாடங்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசம் ஆகிவிட்டதாக தெரியவந்துள்ளது. தீயை அணைத்துவிட்டாலும் அங்கிருந்து வெளியேறிய கரும்புகை சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சற்று சிரமத்துக்குள்ளாகினர். 

பி.எஸ்.என்.எல் அலுவலகத்தின் வடசென்னையில் 60 டவர்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.த இதனால் வடசென்னையில்  பி.எஸ்.என்.எல் சேவை பயன்படுத்தும் தொலைபேசி, இண்டர்நெட், செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பிரச்சனை விரைவில் சரிசெய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது