அரை கிலோ வெங்காயம் கொடுத்தால் ஒரு ஃபுல் பிளேட் மட்டன் பிரியாணி! சென்னையை கலக்கும் அதிரடி ஆஃபர்! எந்த ஹோட்டல் தெரியுமா?

சென்னை: அரை கிலோ வெங்காயம் வாங்கி கொடுப்பவர்களுக்கு ஃபுல் பிரியாணி தரும் என, சென்னை ஓட்டல் ஒன்று அறிவித்துள்ளது.


நாடு முழுவதும் வெங்காயம் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளதால், சாமானிய மக்கள் கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு, சென்னை தரமணியை அடுத்த கந்தன் சாவடியில் உள்ள எம்ஜிஆர்சாலையில் இயங்கும் ஏபி புட் பாரடைஸ் என்ற ஓட்டல் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆம், இந்த ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள், அரை கிலோ வெங்காயம் வாங்கி வந்து கொடுத்தால், ஒரு ஃபுல் பிரியாணி இலவசமாக தரப்படுமாம். வெங்காயத்திற்கு தட்டுப்பாடு நிலவுவதால், தங்களால் அலைந்து திரிந்து அதனை வாங்க முடியவில்லை, இதைச் சமாளிக்கும் வகையில் இப்புதிய ஆஃபரை வெளியிட்டிருக்கிறோம். இதன்மூலமாக, வாடிக்கையாளர்கள் வழியாக, வெங்காயத்தை எளிதாகக் கொள்முதல் செய்து, அதனை வர்த்தகப் பணிகளுக்கு பயன்படுத்தி வருவதாக, ஏபி புட் பாரடைஸ் ஓட்டல் ஊழியர்கள் குறிப்பிடுகின்றனர்.  

அத்துடன் வெங்காயம் விலை குறைந்தால், இந்த சலுகை நீக்கப்படுமாம். எப்போதெல்லாம் வெங்காய தட்டுப்பாடு வருகிறதோ, அப்போதெல்லாம் இந்த சலுகை நடைமுறைக்கு வரும் என்று, ஓட்டல் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஓட்டலுக்கு, தரமணியை சுற்றியுள்ள ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர். இதனால், ஓட்டல் வியாபாரம் சக்கை போடு போடுகிறது...