கூடுதல் கல்விக்கட்டணத்திற்கு ஆசைப்பட்டு, எல்கேஜி படிக்கும் குழந்தையைக்கூட ஃபெயிலாக்கிய தனியார் பள்ளியின் குரூர முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெற்றோரிடம் காசு புடுங்க எல்கேஜி குழந்தையை பெயிலாக்கிய சிபிஎஸ்சி பள்ளியின் குரூரம்!
சென்னை அடையாறில் இயங்கும் பாரத் சிபிஎஸ்இ பள்ளிக்கூடம் தான் இந்த புகாரில் சிக்கியுள்ளது. இங்கு, ஜெய்சங்கர் - ஹேமாவதி என்போர், தங்களது 3 வயது பெண் குழந்தையை எல்கேஜி சேர்த்துள்ளனர். இந்நிலையில், தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால், இதையொட்டி, கடந்த மாதம் ஜெய்சங்கர் தம்பதியை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் நேரில் அழைத்துள்ளது.
அப்போது, எல்கேஜி வகுப்பில் சரியாக படிக்காமல், தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற காரணத்திற்காக, உங்களின் குழந்தையை ஃபெயில் செய்வதாக, நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர். இதனால், வரும் ஜூனில் தொடங்கும் புதிய கல்வியாண்டிலும், அவர்களின் குழந்தை எல்கேஜிதான் படிக்க வேண்டும் என்று கூறி அதிர வைத்துள்ளனர்.
இதற்கு தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, ஓராண்டுக்கு, ரூ.65,273 கட்டணம் செலுத்திய ஜெய்சங்கர் தம்பதியினர், எல்கேஜியில் தங்கள் குழந்தை ஃபெயிலான செய்தியை கேட்டு, வியப்பும், அதிர்ச்சியும் அடைந்தனர். விசாரணையில், கூடுதல் கல்விக்கட்டணத்திற்கு ஆசைப்பட்டு, அவர்கள் இப்படி செய்ததாக, தெரியவந்துள்ளது.
இதுபற்றி ஜெய்சங்கர் தம்பதியினர் சமூக ஊடகங்களின் வாயிலாக, குறிப்பிட்ட பள்ளி நிர்வாகம் பற்றி செய்தி பகிர்ந்துள்ளனர். இது, வைரலாகப் பரவி வருகிறது. 5ம் வகுப்பு வரை, மாணவ, மாணவிகளை ஃபெயில் செய்யக்கூடாது என்று, அரசு உத்தரவு தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.