மகள் திருமண வரவேற்புக்கு சென்ற தந்தை! மனைவி கண் முன்னே வெட்டிக் கொன்ற கொடூரம்! பதற வைக்கும் காரணம்!

மனைவி கண் எதிரே ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மகளின் திருமண வரவேற்புக்கு செல்ல முயன்றபோது அந்த வழியே வந்த மர்ம கும்பல் வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.


சென்னை அயனாவரம் திக்காகுளம் பகுதியை சேர்ந்தவர் ஜெபசீலன் 48, ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி பிரிஸ்டில்லா. இவர்களுக்கு ஷீபாராணி என்ற மகளும், 17 வயதில் ஒரு மகனும் உள்ளனர். முதல் மகளான ஷீபாராணிக்கு கடந்த 10-ந் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற்றது.

நேற்று மாலை இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மீஞ்சூரில் கோலாகலமாக நடைபெற இருந்தது. இதற்காக அயனாவரத்தில் உள்ள தனது உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களை மகள் திருமண வரவேற்பில் கலந்துகொள்வதற்காக தனியாக பஸ் வசதி ஏற்பாடு செய்து மீஞ்சூருக்கு அனுப்பிவைத்தார்.

பின்னர் கடைசியாக ஜெபசீலன் மனையுடன் நண்பரின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்றபோது, எதிரே வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்தது.அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்து இருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ஜெபசீலனை சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மனைவி கண் எதிரேயே பரிதாபமாக இறந்தார்.

கடந்த மாதம் அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் 18 வயது நிரம்பாத சிறுமியை திருமணம் செய்ய இருந்த நிலையில் அதனை ஜெபசீலன் உள்ளிட்ட அந்த பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது. இதனால் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.