உயிருக்கு போராடிய 2 பெண்கள்! இலவசமாக இதயம் மாற்று அறுவை சிகிச்சை! நெகிழ வைத்த சென்னை தனியார் மருத்துவமனை!

சென்னை: இரண்டு சிறுமிகளுக்கு சென்னையை சேர்ந்த எம்ஜிஎம் ஹெல்த்கேர் இலவசமாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளது.


நாகர்கோயிலை சேர்ந்தவர் அகல்யா. 11 வயதான இவருக்கு சிறு வயதிலேயே இதய பாதிப்பு இருந்துள்ளது. கூலி வேலை செய்யும் இவரது குடும்பத்தினரால் மருத்துவச் செலவை தாங்க முடியாத சூழலில், உதவிக்கரம் எதிர்பார்த்து வந்தனர். இதேபோல, சென்னையை சேர்ந்தவர் 17 வயது பள்ளி மாணவி துஷிதா. இவருக்கும் இதய பாதிப்பு ஏற்பட்டு உயிருக்குப் போராடி வந்தார்.  

இந்நிலையில், இவர்கள் 2 பேருக்கும் ஐஸ்வர்யா டிரஸ்ட் மூலமாக உதவிக்கரம் நீண்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளை தீர்க்க உதவி செய்துவரும் ஐஸ்வர்யா டிரஸ்ட், அவர்கள் 2 பேருக்கும் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து தர ஏற்பாடு செய்தது. இதன்படி, சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அவர்கள் உதவி கோரினர். இவர்களின் கோரிக்கையை பரிசீலித்த மருத்துவமனை நிர்வாகம், இலவசமாகவே இந்த சிகிச்சையை செய்து தர முடிவு செய்தது.  

இதன்படி, 2 சிறுமிகளுக்கும் மாற்று இதயம் உடனடியாக கிடைக்கவே, அவர்களுக்கு தற்போது வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றியுள்ளனர். இருவரது உடல்நிலையும் தேறிவருகிறது. கடந்த 2014ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐஸ்வர்யா அறக்கட்டளை இதுவரையிலும் 87 பேருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை கிடைக்க உதவி புரிந்துள்ளது. அத்துடன் 3500 பேருக்கு, இதயம் சார்ந்த மருத்துவ சிகிச்சை கிடைக்கவும் உதவி செய்துள்ளதாக, அதன் நிர்வாகி சித்ரா விஸ்வநாதன் குறிப்பிடுகிறார்.