சென்னை அம்பத்தூரில் ஐ.டி. நிறுவனத்தின் 8-வது மாடியிலிருந்து விழுந்து தனிதா உயிரிழந்த சம்பவத்தில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.
லாக் செய்யப்பட்டிருக்கும் செல்போன்! 8வது மாடியில் ஒரு ஷூ! தனிதா மர்ம மரணத்தில் புதிய திருப்பம்!

திருச்சியை சேர்ந்த ஜூலியஸ்-சாந்தி தம்பதியின் 2வது மகள் தனிதா. எம்.ஏ ஆங்கிலம் படித்த தனிதா அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் ஊழியர்களை நேர்முகத் தேர்வு செய்து பணிக்கு எடுக்கும் வேலையில் சேர்ந்தார். பணிக்கு சேர்ந்த முதல் நாளே தனிதா, அலுவலகத்தின் 8-வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.
தனிதா உயிரிழப்புக்கு குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் இறப்பதற்கு முன் தனது தந்தையுடன் வாட்ஸ்அப்பில் வேலை செய்யும் இடம், குடும்பம் உள்ளிட்டவை குறித்து சாட் செய்துள்ளார். மேலும் தனிதாவின் செல்போன் லாக் செய்யப்பட்டுள்ளதால் அந்த லாக்கை திறந்தால் தனிதாவுடன் இறுதியாக பேசியது யார் என தெரியவரும் என போலீஸ் தெரிவித்துள்ளது.
மாரத்தான் ஓட்டங்களிலும் பங்கேற்றுள்ள தனிதா மாடிகளில் ஏறுவதற்கு லிப்ட்டை பயன்படுத்தாமல் படிகளிலேயே பயன்படுத்தி வந்துள்ளார். இது குறித்து தனிதாவின் தந்தை அளித்த பேட்டியில் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மகள் கோழை அல்ல என தெரிவித்துள்ளார்.
மேலும் தனிதாவின் ஒரு ஷூ 8-வது மாடியிலும் இன்னொரு ஷூ அவரின் சடலத்தின் அருகில் இருந்தது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கும் போலீஸ் மாடிப்படியில் சிசிடிவி இல்லாததால் உண்மையான காரணத்தை கண்டறிய சிறிது காலம் தேவைப்படும் என தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஐ.டி.நிறுவனத்தின் காவலாளி முதல் மேல் அதிகாரிகள் வரை அனைவரிடமும் விசாரணை நடத்தியதோடு மற்ற இடங்களில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.