எடப்பாடியின் 10 ஆயிரம் கோடி திட்டத்தில் மண்! விவசாயிகள் செம குஷி.!

மோடி அரசின் பாரத்மாலா என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, சேலத்தில் இருந்து சென்னைக்கு ரூ.10,000 கோடி ரூபாயில் 8 வழி பசுமை வழிச்சாலை அமைக்க திடீரென தமிழக அரசு முடிவு எடுத்தது.


இதற்கென எந்த கருத்துக்கேட்புக் கூட்டமும் நடத்தப்படாமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கப்பட்டது. இந்த சாலை சென்னையில் இருந்து காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, நிலம் எடுப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

ஏற்கெனவே சேலத்தில் இருந்து சென்னைக்கு இருக்கும் பல்வேறு சாலைகளை மேம்படுத்தாமல், புதிய சாலை அமைத்தால் ஏராளமான விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள், மரங்கள் பாதிக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் நிலம் எடுக்கும் பணியில் இறங்கியது அரசு.

இதனால் இந்த திட்டத்தை செயல்படுத்த கூடாது என்று அன்புமணி ராமதாஸ், பூவலகின் நண்பர்கள் உள்பட பலர், உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை நீதிபதிகள் டிஎஸ் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு விசாரித்து வந்த நிலையில், இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி, ‘‘இந்தத் திட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளதால் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதி பெற்று புதிய அரசாணை வெளியிட வேண்டும். இப்போது  நிலங்களை கையகப்படுத்தியது செல்லாது. வருவாய் ஆவணங்களில் செய்யப்பட்ட மாற்றத்தை 8 வாரத்திற்குள் சரி செய்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். எனவே 2018ம் ஆண்டு இதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.

இந்த தீர்ப்புக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். எடப்பாடி அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படும் இந்தத் தீர்ப்பு தேர்தலில் எதிரொலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மீண்டும் மேல் முறையீடுகளில் இறங்கிவிடாமல் இருந்தால் சரிதான்.