தி.மு.க.வில் அரங்கேறப்போகும் மாற்றங்கள் - உள்கட்சித் தேர்தலை முடுக்க 17-ல் மா.செ.கள் கூட்டம்!

கருணாநிதியின் மறைவை அடுத்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நடைபோடத் தொடங்கிய பிறகு, அக்கட்சியில் இலேசாக அமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டுவருகின்றன.


உள்கட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து, வரும் 17-ம் தேதி மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அழகிரியின் இடையூறு எதுவும் இனி வராது என்பது ஏறத்தாழ உறுதிசெய்யப்பட்டுவிட்ட நிலையில், கட்சியின் இளைஞர் அணிக்கு உதயநிதி பொறுப்பாளர் ஆக்கப்பட்டார்.

உள்ளாட்சித் தேர்தலில் சரியாகச் செயல்படாத மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்/ பொறுப்பாளர்களை மாற்றுவது வரிசையாக நடந்துவருகிறது. சேலத்தில் ஒரு காலத்தில் ஓகோவென செல்வாக்காக இருந்த மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜாவிடமிருந்து மா.செ. பதவி பறிக்கப்பட்டது கவனத்துக்குரியது.

இதேவேளை, உள்ளாட்சித் தேர்தலில் சிறப்பாகச் செயல்பட்ட திருச்சி மா.செ.களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் நேருவிடமிருந்து மா.செ. பதவி பறிக்கப்பட்டு, தலைமைநிலைய முதன்மைச்செயலர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. உதயநிதியின் நெருக்கமான நண்பரான அன்பில் தர்மலிங்கம் பேரனுமான அன்பில் மகேசுக்கு மாவட்டச்செயலாளர் பதவி கிடைக்கும்வகையிலேயே இந்த மாற்றம் செய்யப்பட்டதை அறியமுடிகிறது.

இதைப் போலவே மற்ற பல மாவட்டங்களிலும் ஸ்டாலினின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கட்சியைக் கொண்டுவருவதற்கான வகையில், உள்கட்சித் தேர்தல் முடிவுகள் அமையும் என்று தெரிகிறது. இதையொட்டி, வரும் 17ம் தேதி திங்கள் மாலை 5 மணியளவில் மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் க. அன்பழகன் பெயரில் இன்று முற்பகல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.