சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் நிலவில் பாதுகாப்பாக தரையிறங்கியிருக்கலாம்! இஸ்ரோ விஞ்ஞானி கூறும் அடடே தகவல்!

சந்திராயன் - 2 விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது ஏற்பட்ட தோல்வி குறித்து இஸ்ரோ முன்னாள் இயக்குநர் சசிக்குமார் புதிதாக ஒரு கருத்த தெரிவித்துள்ளார்.


ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த இஸ்ரோ முன்னாள் இயக்குநர் சசிக்குமார் விக்ரம் லேண்டரில் இருந்து தகவல் துண்டிக்கப்பட்டதற்கான காரணம் லேண்டர் செயலிழந்தது அல்ல என தனது கருத்தை பதிவிட்டுள்ளார். தகவல் தொடர்பு தரவுகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என கூறி உள்ள சசிக்குமார் அந்த தகவல்கள் கிடைத்த பின்னரே நிலவில் லேண்டர் வெற்றிகரமாக தரையிறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதா இல்லையா என தெரியவரும் என கூறி உள்ளார்.  

லேண்டர் மற்றும் ஆர்பிட்டர் இடையே தகவல் தொடர்பு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள சசிகுமார் லேண்டருக்கு நிலவில் எதுவும் ஆகியிருக்காது என்று தான் நம்புவதாகவும் கூறினார். தற்போது கிடைத்த தகவல் எதுவாக இருந்தாலும் கொஞ்ச காலம் பொறுத்திருந்தால் நல்ல விஷயங்களை எதிர்பார்க்கலாம் என தெரிவித்தார்.

சந்திரயன் -2 விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் நிகழ்வு கடைசி நேரத்தில் தோல்வியை தழுவியது. விக்ரம் தரை இறக்கும் பணி நள்ளிரவு 1.38 மணிக்கு தொடங்கப்பட்டது. 13 நிமிடங்களுக்குப் பிறகு தரையிறக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

விக்ரமின் தரை இறக்கும் திட்டம் நிலவிலிருந்து 2.1 கி.மீ உயரத்தில் வரை நல்ல முறையில் காணப்பட்டது. இதற்குப் பிறகு தான், லேண்டரிலிருந்து எந்த தகவலும் வரவில்லை. கடைசியாய் வந்த தகவல்களை வைத்து தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்வோம் என இஸ்ரோ தலைவர் சிவன் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.