மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி! ஓபிஎஸ் - அமித் ஷா – நட்டா சந்திப்பின் பின்னணி!

மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியை ஏறக்குறைய உறுதி செய்துவிட்டார் ஓபிஎஸ் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.


தமிழகத்தில் அதிமுக ஒரே ஒரு இடத்தில் வென்ற நிலையில் அதன் மூலம் எம்பியாக நாடாளுமன்றம் சென்றவர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத். அவருக்கு மத்திய அமைச்சர் பதவியை எப்படியும் வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்று தந்தை ஓபிஎஸ் பகீரத முயற்சி மேற்கொண்டார்.

ஆனால் எடப்பாடி தரப்பின் முட்டுக்கட்டையால் அது நடக்காமல் போனது. கடைசி நேரத்தில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் பெயர் பதவி ஏற்பவர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இருந்தாலும் ஓபிஎஸ் மனம் தளரவில்லை.

தொடர்ந்து தனது மகனுக்கு மத்தியஅமைச்சர் பதவியை பெற தீவிரம் காட்டி வருகிறார். இதற்காகவே அவர் டெல்லி சென்றுள்ளார். பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்து பேசிய ஓபிஎஸ் தனது மகனுக்கு மத்தியஅமைச்சர் பதவியை உறுதி செய்துவிட்டதாக கூறுகிறார்கள்.

இதற்கு பலனாக ஓபிஎஸ்சிடம் இருந்து சில விஷயங்களை அமித் ஷா கோரியுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் பாஜகவை காலூன்றச் செய்யும் வகையிலான சில வேலைகளுக்கு அதிமுகவின் உதவி பாஜகவிற்கு தேவைப்படுகிறது.

அதில் முக்கியமான உள்ளாட்சித்தேர்தலில் கணிசமான இடங்கள். அந்த இடங்களை பாஜகவிற்கு பிரச்சனை இன்றி கொடுத்து வெற்றி பெற வைக்கும் பட்சத்தில் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சரவை பதவி உறுதி என்று வாக்குறுதி கொடுத்ததாக சொல்கிறார்கள்.

அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்பதால் தனது மகன் மத்திய அமைச்சர் ஆவது உறுதி என்று கணக்கு போட்டு வருகிறார் ஓபிஎஸ். இதனிடையே பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி நட்டாவும் ஓபிஎஸ் மகனுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதில் ஆர்வமாக இருப்பதாக சொல்கிறார்கள்.