தொழில்துறை உறவுகள் சட்டத்தொகுப்பு – 2020 என்ற பெயரில் ஒரு புதிய சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்து, தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கிறது என்ற ஆதங்கம் எழுந்துள்ளது.
தொழிலாளர்கள் பாதுகாப்புக்கும் ஆப்பு வைக்கும் மத்திய அரசு..!

இந்த சட்டப்படி, தொழிலாளர் சட்டங்கள் செல்லுபடியாகது என எந்த ஒரு நிறுவனத்திற்கும் விலக்களிக்க முடியும். இதேபோன்று தொழிலாளர்களின் பணிசார் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணி நெறிமுறைகள் ஆகியவற்றுக்கெல்லாம் நிறுவனம் பொறுப்பேற்காது என்பதாக சட்டத்தொகுப்பு 2020 ல் இருந்தும் குறிப்பிட்ட காலத்திற்கு விலக்கு அளிக்க அரசுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அவசரநிலைக் காலங்களில், அதுவும் மூன்று மாதங்களுக்கு மட்டும் தான் விலக்களிக்க முடியும். ஆனால் புதிய சட்டத் தொகுப்புகளில் இடம்பெற்றிருக்கும் விலக்கு அளிக்கும் பிரிவுகள், தொழிலாளர்கள் நலனைப் பாதிப்பதுடன் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.
தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து முதலாளிகளுக்கு கணிசமான நன்மைகள் வழங்கப்படுவதை ஒரே நோக்கமாக தொழில்துறை உறவுகள் சட்டம் – 2020 ல் தெளிவாகத் தெரிவிக்கின்றன. வேலைநேரம், ஊதிய விகிதம், தொழிலாளர்கள் வகைப்பாடு, விடுமுறை நாட்கள், ஊதிய நாட்கள், தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது, வேலையிலிருந்து நீக்குவது தொடர்பான நடைமுறைகள், வேலைநிறுத்தம் போன்ற போராட்டங்களில் ஈடுபடுவதற்கான கட்டுப்பாடுகள் போன்ற அனைத்திலும் இனி முதலாளிகள் வைத்ததே சட்டம் என புதிய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
100 தொழிலாளர்களுக்கு மேல் பணியாற்றும் நிறுவனங்கள் அரசிடம் அனுமதி பெறாமல் எந்த ஒரு தொழிலாளியையும் வேலை நீக்கம் செய்ய முடியாது.என்பது இதற்கு முன்புள்ள நிலமை! ஆனால்,இந்த வரம்பு தற்போது 300 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது 300 தொழிலாளர்களுக்கு கீழ் பணியாற்றும் எந்த நிறுவனமும், இனிமேல் நினைத்த நேரத்தில் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கலாம்.
இது தொழிலாளர் சட்டங்களின் நோக்கத்திற்கு வெளியே பல கோடி பேரை பாதுகாப்பற்ற நிலையில் நிறுத்திவிடுகிறது. 100 தொழிலாளர்களுக்கு கீழ் பணியாற்றும் நிறுவனங்கள், அவர்களின் வேலையின் தன்மை குறித்த விவரங்களை வரையறுக்க வேண்டியது கட்டாயமில்லை.
தற்போது இந்த வரம்பு 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட வேலைக்கு பணியமர்த்தப்பட்ட தொழிலாளியை விருப்பாம் போல எந்த வேலையை வேண்டுமானாலும் செய்ய நிர்பந்திக்கலாம். தொழில்துறை உறவுகள் சட்டத்தின் பிரிவு 5, குறைந்தபட்ச ஊதியம் பெறுவதற்கான உரிமையை தொழிலாளிக்கு வழங்குகிறது.
ஆனால் ‘தொழிலாளி’ யார் என்பதை வரையறுக்கும் தொழில்துறை உறவுகள் சட்டம் பிரிவு 2 (k) ல் அவர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். இந்தப் பிரிவு பல்வேறு துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு விலக்கு அளித்துள்ளதால் அனைவரும் குறைந்தபட்ச ஊதியம் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. புதிய சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள ‘வரையறுக்கப்பட்ட கால ஒப்பந்தம்’ (Fixed term contract) காண்ட்ராக்ட் முறையை சட்டப்படியானதாக மாற்றியிருக்கிறது.
இதன்மூலம் முதலாளிகள் விரும்பியபடி வேலையில் அமர்த்திக்கொள்ளவும், பணி நீக்கம் செய்யவும் முடியும். இதனால் ஒப்பந்த காலத்தை நீட்டிப்பதற்கும், வேலையில் நீடிப்பதற்கும் முதலாளியின் ‘கருணையை’ தொழிலாளர்கள் நம்பியிருக்க வேண்டும். இந்த நிலை தொழிலாளர்கள் மத்தியில் அமைதியற்ற சூழலை ஏற்படுத்திவிடும்.
வரையறுக்கப்பட்ட கால ஒப்பந்தத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யும் முன்பு நோட்டீஸ் அல்லது ஊதியங்களை பெறும் உரிமையை இந்த சட்டம் உத்தரவாதப்படுத்தவில்லை. வேலை இழக்கும் தொழிலாளர்கள் ஆட்குறைப்பு இழப்பீடு பெறவோ, சங்கத்தில் சேர்ந்து உரிமை கோரவோ முடியாது. இவற்றைத் தொகுப்பாகப் பார்த்தால், தொழிலாளர்களின் நலன்கள் பறிபோயிருப்பதுடன் வேலைநிறுத்த உரிமையும் கானல் நீராகியிருப்பது புரியும்.
அடுத்து, ஆபத்தான தொழில்கள் என வகைப்படுத்தியவற்றில், பெண்களை பணிக்கு அமர்த்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இந்திய உழைக்கும் மக்களில் 50 விழுக்காட்டுக்கு மேலானவர்கள் வேலை செய்யும் வேளாண் துறையின் பல்வேறு பிரிவுகளுக்கு இந்த சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டுமானம், செங்கல் சூளைகள், விசைத்தறிகள் போன்ற தொழில்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
புதிதாக வளர்ந்துவரும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த தொழில்கள், இணைய வணிகம் போன்றவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் இந்த சட்டத்தில் இருந்து விலக்கு தரப்பட்டுள்ளது. மாநிலங்கள் கடந்து சென்று வேலை பார்க்கும் புலம்பெயர் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, அவர்களைப் பணிக்கு அமர்த்தும் ஒப்பந்ததாரர் மீது தான் அனைத்துச் சுமைகளும் விழுந்துள்ளன. முதலாளிகளோ கார்ப்பரேட் தொழில் நிறுவனங்களோ எந்தப் பொறுப்பும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஒப்பந்ததாரர் தான் அனைத்தையும் செய்ய வேண்டும். அதாவது இடைத் தரகரான காண்டிராக்டர் தான் எல்லாம்! அவரை எந்த சட்டமும் கட்டுப்படுத்தாது.
ஆக, மொத்தத்தில், மோடி அரசு கொண்டு வந்திருக்கும் புதிய தொழிலாளர் சட்டங்களால் நவீன கொத்தடிமை முறை உருவாகும் என்று பேச்சு எழுந்துள்ளன.