மாணவர்களுக்கு காமசூத்ரா பாடம்! புதிய கல்விக் கொள்கையில் விபரீத பரிந்துரை?

சென்னை: உயர் கல்வியில் காமசூத்ராவை அறிமுகம் செய்ய மத்திய அரசு புதிய முயற்சி மேற்கொண்டுள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


மோடி தலைமையிலான மத்திய அரசு தற்போது, தேசிய கல்விக் கொள்கையை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.  இதன்படி, தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு நிறைவடைந்துள்ளதாகவும், அதில், இந்தியா முழுவதும் மும்மொழிக் கொள்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப் போவதாகக் கூறப்பட்டுள்ளதாகவும் கூறி, சில நாட்கள் முன்பாக சர்ச்சை எழுந்தது.

இதற்கு பல தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, அந்த வரைவு திருத்திக் கொள்ளப்படுவதாக, மத்திய அரசு உறுதி அளித்தது. இந்நிலையில், 436 பக்கங்களை கொண்ட புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவில் உள்ள மேலும் சில விசயங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, அந்த கல்விக் கொள்கை வரைவில், யசோதரா எழுதிய தாராள கலைகள் என்ற தலைப்பில் ஒரு குறிப்பு இடம்பெற்றுள்ளதாக, கூறப்படுகிறது. ஆம். இந்த யசோதரா, வாத்ஸாயயனர் எழுதிய காமசூத்ராவிற்கு  உரை எழுதியவர் ஆவார். ஜெயமங்களா என்ற பெயரில், அவர் 13ம் நூற்றாண்டில் காமசூத்ராவிற்கு உரை எழுதியுள்ளார். 

அதில் மொத்தம் 512 விதமான கலைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தையுமே புதிய கல்விக் கொள்கையின் கீழ கொண்டுவந்துள்ளனராம். இந்த தகவலை, தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உயர் கல்வியில் காமசூத்ரா வருவதன் மூலமாக, அனைவருக்கும் பாலியல் அறிவு மேம்படும் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், இது நாட்டில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்றே சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.