சாத்தான்குளம் பிரச்சனைக்கு சி.பி.ஐ. கைக்குப் போய்விட்டால் விசாரணை தாமதமாகும்! சி.பி.சி.ஐ.டி. நடத்துவதே போதும்..

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தை சி.பி.ஐ. விரைவில் கையில் எடுக்க இருக்கும் நிலையில், அதற்கு அவசியமே இல்லை. இப்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணை திருப்திகரமாக உள்ளது என்று பொதுமக்களும், வியாபாரிகளும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


ஏனென்றால், இந்த விவகாரத்தை சி.பி.சி.ஐ.டி. தங்களுடைய பிரஸ்டீஜ் விஷயமாக எடுத்துக்கொண்டு, அதிரடி நடவடிக்கை எடுத்துவருகிறது. இதனை 2 வழக்குகளாக பதிவு செய்தது. ஒரே நாளில் ரகு கணேஷ் கைது செய்யப்பட்டார். அடுத்து, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 3-ம் தேதி காவலர் முத்துராஜையும் போலீஸார் கைது செய்தன

இதனையடுத்து புதன் கிழமை சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லத்துரை, சாமதுரை, வெயில்முத்து, பிரான்சிஸ்தாமஸ் ஆகிய 5 பேரிடமும் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி, அவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் எஸ்.எஸ்.ஐ பால்துரை மற்றும் காவலர் தாமஸ் ஆகியோருக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால், தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மற்ற மூவரும், சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இத்தனை விரைவான விசாரணையை மக்களே எதிர்பார்க்கவில்லை. அதனால், பொதுமக்களும், வியாபாரிகளும், இந்த வழக்கை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. நடத்துவதே போதும். அப்போதுதான் விரைந்து நீதி கிடைக்கும். சி.பி.ஐ. கைக்குப் போய்விட்டால் விசாரணை தாமதமாகும்.

தாமதமாகும் நீதியும் ஒரு தண்டனை. அதனால் சி.பி.ஐ. வேண்டவே வேண்டாம் என்று முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்கள். நீதிமன்றம் தலையிட்ட பிறகு முதல்வரால் என்ன செய்யமுடியுமோ..?