இழுத்து மூடப்பட்டதா காவேரி டிவி? ஒரே நாளில் 146 ஊழியர்கள் டிஸ்மிஸ்!

காவேரி தொலைக்காட்சி ஒரே நாளில் சுமார் 146 பேரை பணியில் இருந்து நீக்கியுள்ளதால் அந்த தொலைக்காட்சி இழுத்து மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


மின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் முன்னணியில் இருந்த காவேரி குழுமம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காவேரி தொலைக்காட்சி எனும் சேனலை துவங்கியது- நீண்ட இழுபறிக்கு பிறகு லைசென்ஸ் வாங்கி ஒளிபரப்பை அந்த சேனல் துவங்கியது.

ஆனால் அரசு கேபிள் டிவியில் ஒளிபரப்ப ஜெயலலிதா ஒத்துழைக்காத காரணத்தினால் தடுமாறிக் கொண்டிருந்தது. பிறகு ஓபிஎஸ் முதலமைச்சராக இருந்த சமயத்தில் காவேரி டிவி அரசு கேபிளில் ஒளிபரப்பாகும் நிலை உருவானது.

இதன் பிறகு முதலமைச்சர் பதவியில் இருந்து ஓபிஎஸ் விலகிய நிலையில் மீண்டும் சிக்கலில் சிக்கியது காவேரிடிவி. இதனால் இணையதள செய்தி மற்றும் இணையதள வீடியோ செய்தியில் காவேரி டிவி கவனத்தை திருப்பியது.

இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான போது அமைச்சர் மணிகண்டன் மூலமாக காவேரி டிவி அரசு கேபிளில் ஒளிபரப்பானது. ஆனால் அரசு கேபிளில் இடம் கிடைத்த அன்றே ஆர்.கே நகர் தொகுதியில் டிடிவி தினகரன் வெல்வார் என கருத்துக் கணிப்பை வெளியிட்டது அந்த டிவி.

இதனால் அன்றைய தினமே அரசு கேபிளில் இருந்து காவேரி டிவி அகற்றப்பட்டது. இதன் பிறகு அந்த டிவியால் எழவே முடியவில்லை. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் சுமார் 146 பேர் காவேரி டிவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இணையதள பிரிவில் பணியாற்றி 20 பேரில் 11 பேரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். இதனால் காவேரி டிவி இழுத்து மூடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் இந்திய அளவில் பிரபலமாக விளங்கும் ஊடக குழுமம் காவேரி டிவியை விலைக்கு வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

புதிய ஊழியர்களுடன் காவேரி டிவியை வேறு ஒரு பெயரில் லாஞ்ச் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதால் தான் பழைய ஊழியர்கள் பணியில் இருந்து விரட்டப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.