ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுத்த கனிமொழி! வீடியோ வெளியாகி வைரல்!

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கனிமொழி உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


திருச்செந்தூரில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கனிமொழி மற்றும் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உட்பட ஏழு பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வருகிற ஏப்ரல் 18-ந் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிடுகிறார். இதனையொட்டி தூத்துக்குடி தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கனிமொழி தனது கூட்டணி கட்சியினர்களுடன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அனிதா ராதாகிருஷ்ணனுடன் கனிமொழி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற போது அனிதா ராதாகிருஷ்ணன் பணம் வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதனையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக ஏரல் வட்டாட்சியர் முத்துராமலிங்கம் புகாரின் பேரில் கனிமொழி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட 7 பேர் மீது திருச்செந்தூர் தாலுகா காவல்நிலையத்தில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.