கேர் ஆப் கஞ்சிரப்பள்ளம்! பீல் படங்களில் இது ஸ்பெசல்! அடடே விமர்சனம்!

என்னதான் தினமும் ஒரு படமோ அல்லது சீரீஸோ பார்க்காம தூங்குறதில்லைன்னாலும் கூட, அப்பப்போ ஏதோ ஒரு படம் பார்த்து முடிச்சதும் மனசு முழுக்க ஒரு திருப்தியும், இனம்புரியாத ஒரு சந்தோஷமும், எல்லாத்தையும் விட,"இப்படி ஒரு படம் எடுத்துட்டு செத்து போயிரணும்டா.." அப்படிங்கிற யோசனையும் அபூர்வமாத்தான் வரும். நேத்து அப்படி வந்தது. கேர் ஆப் கஞ்சிரப்பள்ளம்.


கேர் ஆப் கஞ்சிரப்பள்ளம்.

வழக்கமா ஒவ்வொரு வருஷமும் மலையாளப்படங்கள்தான் பெருமளவு ஃபீல் குட் கேட்டகிரியில இடம்பெறும். த்ரில்லர்லயும் கூட. ஆனா இந்த வருஷம் அதையும் தாண்டி தெலுங்கு படங்கள் வேற லெவல்ல இருக்கு.

ஏற்கனவே ஏஜென்ட் ஆத்ரேயா, ப்ரோச்சவரெவரு பார்த்து சந்தோசமா இருந்த எனக்கு இந்த கஞ்சிரப்பள்ளம் வெரி ஸ்வீட் சர்ப்ரைஸ். இன்னும் சொல்லப்போனா க்ளைமாக்ஸ் வரைக்கும் என் மனசுல இருந்த எண்ணமே வேற. அதைப்பத்தி விவரமா சொல்றேன்.

ஒரு நடுத்தர ஊர். அங்க நடக்குற நான்கு காதல் கதைகள். ஒரு மத்திய அரசு ஆபிஸ்ல அட்டண்டரா வேலை பார்க்குற 49 வயசு ஆளுக்கும், அதே ஆபிஸ்ல ஒரிஸால இருந்து வேலை பார்க்க வர்ற 42 வயசு விதவை பெண்ணுக்கும் நடுவுல ஒரு காதல் உண்டாகுது.

அதேமாதிரி காலேஜ்-ல படிக்கிற ஒரு பிராமின் பொண்ணுக்கும், ஊர்ல ரவுடித்தனம் பண்ணிட்டு திரியிற கிறிஸ்டின் பையனுக்கும் லவ் வருது. ஒரு ஒயின் ஷாப்-ல வேலை பார்க்குறவனுக்கும், தினமும் அந்த கடைக்கு குவார்ட்டர் வாங்க வரும் ஒரு விபச்சாரிக்கும் காதல் வருது. இதுபோக, ஸ்கூல் படிக்கிற ஒரு 10, 12 வயசு பையனுக்கு, அவன் கூட படிக்கிற ஒரு பொண்ணு கூட க்ரஷ் வருது. 

நாலு லவ். நாலுக்கும் விதவிதமா பிரச்சினைகள் வருது. அந்த பிரச்சினைகள் எல்லாமே ஒரு முடிவையும் சந்திக்குது. சில மரணங்கள், மதம் எந்த அளவுக்கு சமூகத்தில ஊடுருவி இருக்குங்கிறதை சொல்றது, கடவுள் நம்பிக்கை நல்லதா கெட்டதா அப்படிங்கிறதை எல்லாம் கதாபாத்திரங்கள் மூலமா புரியவைச்சதுன்னு படம் அவ்ளோ எதார்த்தமா போயிட்டே இருக்கும்போது,

அதுவரைக்கும் வந்த பிரச்சினைகள் எல்லாம் வீரியம் ஆகி நடக்குற எல்லாமே மனசளவுல நம்மை தீவிரமா பாதிக்கிற விஷயமா மாறி நிக்கும். அதனாலேயே படம் எனக்கு பிடிக்காம, வேண்டா வெறுப்பா, கடைசியில என்னதான் ஆகுதுன்னு பார்ப்போம்னு கடைசி இருபது நிமிஷங்களை பார்த்தேன். நல்லவேளை பார்த்தேன். 

ஒரு க்ளைமாக்ஸ் வச்சிருக்காங்க பாருங்க.. அப்படியே மனசு முழுக்க பட்டாம்பூச்சி பறந்தது. என்னையும் அறியாம ரொம்ப நேரம் புன்னகைச்சிக்கிட்டே இருந்தேன். இன்னொரு மனுஷன் வாழ்க்கையை கண்ணுமுன்னால பார்த்த அந்த சந்தோஷம். அவன் கடைசியா புன்னகைக்கிற சந்தர்ப்பத்தை அடைஞ்சிட்டாங்கிற அந்த திருப்தி.

எந்த இடத்துலயும் அவன் நம்பிக்கையை இழக்காம அடுத்த துன்பத்துக்காக தயாரா இருந்திருக்கான்..அவனை பார்த்து நாம கத்துக்கணும்ங்கிற அந்த உத்வேகம்னு, வார்த்தையிலே சாதாரணமா சொல்லமுடியாத ஒரு படம் இது.

ரொம்ப இயல்பான முகங்கள். குறிப்பா படத்தோட நாயகிகள் எல்லாருமே மனசுக்கு அவ்ளோ நெருக்கமா இருந்தாங்க. கதை நடக்குற காலகட்டங்களை அவங்க பிரிச்சி விதமும், அதுக்கேத்த மாதிரி கேமரா ஒர்க்கும் அட்டகாசம். குறிப்பா பின்னனியில் ஒலிக்கிற எல்லா பாட்டுமே அவ்ளோ சுகமா இருந்தது.

திரைக்கதை எழுத கத்துக்கணும்னு நினைக்கிறவங்க தாராளமா இந்தப்படத்தை ஸ்டடி பண்ணலாம். கலைச்சி போடப்பட்ட சீட்டுக்கட்டை ஒழுங்கா அடுக்குற அந்த வேலை அவ்ளோ சுகமா இருக்கும். முயற்சி பண்ணுங்க.

படத்தோட அருமை தெரிஞ்சி அதை வாங்கி வெளியிட்ட பல்வாள்தேவன் ராணாவுக்கு நன்றி. நெட்ப்ளிக்ஸ்-ல இருக்கு.. மிஸ் பண்ணிராதீங்க.

விமர்சனம்; பாலகணேஷ்.