பணம் டெபாசிட் செய்தாலும் கட்டணம்! வாடிக்கையாளர்களை அதிர வைத்த கனரா வங்கி!

பொதுத்துறை வங்கியான கனரா வங்கி ஜூலை 1ம் தேதி முதல் ஒரு புதிய டெபாசிட் கொள்கையை அறிவித்துள்ளது.


அதில் மாதம் மூன்று முறைக்கு மேல் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்தால் அதற்கு தனியே கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

முதலில் தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தின் மூலம் மாதத்திற்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அதற்கு மாறாக வங்கியில் பணத்தை டெபாசிட் செய்தாலும் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக வங்கி அறிவித்துள்ளது. இதன்படி மாதம் மூன்று முறை 50,000 வரை டெபாசிட் செய்து கொள்ளலாம்.

வாடிக்கையாளர்கள் 3 முறைக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தால் 1000 ரூபாய்க்கு 1 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் இந்த கட்டணம் ரூபாய் 50 முதல் 50,000 வரை பொருந்தும் எனவும் வங்கி அறிவித்துள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் படி அனைத்து பண பரிவர்த்தனைகளை ஆன்லைன் மூலமே நடக்க வேண்டும் என மோடி அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதன்பேரில் தற்போது அதிகப்படியான பண பரிவர்த்தனைகள் அனைத்துமே ஆன்லைன் மூலமே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொதுத்துறை வங்கியான கனரா வங்கி இந்த மாதிரியான அறிவிப்பை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் சிறு குறு தொழிலாளர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக தெரிகிறது.

இத்திட்டம் டிஜிட்டல்  இந்தியா திட்டத்திற்கு எந்த அளவிற்கு கைகொடுக்கும் என தெரியவில்லை.இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வங்கியில் அதிகளவில் டெபாசிட் செய்வது குறையும் என்றும் கருதப்படுகிறது. இதன் மூலம் அனைத்து வாடிக்கையாளர்களும் ஆன்லைன் மூலம் மட்டுமே பணம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.