பெண்ணின் வயிற்றுக்குள் கிளவுஸ், ஸ்பாஞ் துண்டுகளை மறந்து வைத்து தைத்த டாக்டர்! அறுவை சிகிச்சையின் போது விபரீதம்!

கனடாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்ணின் வயிற்றில் கையுறைகள் மற்றும் பஞ்சை வைத்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கனடாவில் டிரேசி வாலஸ் என்ற பெண்மணி சமீபத்தில் கர்ப்பப்பை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் அறுவை சிகிச்சை செய்த நாள் முதலே அவர் வயிற்று வலியால் துடித்து வந்தார். மேலும் வயிற்றில் ஏதோ துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்தால் வலி சில நாட்கள் நீடிக்கும் என மருத்துவர்கள் சமாதானம் செய்து அனுப்பி உள்ளனர். 

ஆனாலும் மேலும் சில நாட்கள் காத்திருந்தும் வலி நின்ற பாடில்லை. பின்னர் மருத்துவமனையை முற்றுகையிட்ட டிரேசி வாலஸ் தனக்கு முறையாக வைத்தியம் பார்க்கவில்லை என்றால் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என அடம் பிடித்துள்ளார். பின்னர் அவரது வயிற்றை மீண்டும் அறுவை சிகிச்சை செய்து பார்த்தபோது அதில் 2 கையுறைகள் மற்றும் கொஞ்சம் பஞ்சு இருப்பதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவை அப்புறப்படுத்தப்பட்டு மீண்டும் தையல் போடப்பட்டது. தற்போது எந்த வலியும் இன்றி நலமாக உள்ளார் டிரேசி வாலஸ். ஏற்கனவே செய்த கவனக்குறைவான அறுவை சிகிச்சைக்காக டிரேசி வாலஸிடம் மன்னிப்பு கோரியுள்ளது மருத்துவமனை நிர்வாகம். நாளுக்கு நாள் செல்போன் மோகம் அதிகரித்து வருவதால் ஒருவேளை மருத்துவர்கள் செல்போனில் பேசிக்கொண்டே அறுவை சிகிச்சை செய்திருக்கலாம் என்றும், அதனால் கவனக்குறைவாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அங்குதான் அப்படி என்றால் சமீபத்தில் ராமநாதபுரம் மரவெட்டி வலசை கிராமத்தைச் சேர்ந்த ரம்யா என்பவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்த அரசு ஆரம்ப சுகாதார மைய செவிலியர்கள் அறுவை சிகிச்சை முடிந்ததும் தவறுதலாக உடைந்த ஊசியின் பாகத்தை அவரது அடிவயிற்றில் வைத்து தைத்துள்ளனர். இதனால் தொடர்ந்து வலியில் துடித்த ரம்யாவை பரிசோதித்தபோது உண்மை வெளியில் வர மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் உடைந்துபோன ஊசி வெளியில் எடுக்கப்பட்டது.