ஆகஸ்ட் மாதம் சம்பளம் இன்னும் போடவில்லை! பரிதவிக்கும் 2 லட்சம் ஊழியர்கள்! இழுத்து மூடப்படுகிறதா BSNL..?

ஆகஸ்ட் மாதத்திற்கான ஊதியம் இன்னும் வழங்கப்படாததால் பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.


நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பிஎஸ்என்எல். சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மற்றும் நட்டத்தில் அந்த நிறுவனம் சிக்கித் தவிக்கிறது. ஒரு லட்சத்து 65 ஆயிரம் ஊழியர்கள், அதிக சம்பளம், நவீன மயமாக்கலில் பின்தங்கி இருப்பது போன்றவையே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தை இழுத்து மூடுவதற்கும் மத்திய அரசு தயாராக இல்லை. அதற்கு மாறாக நிதி உதவி அளித்து அந்நிறுவனத்தை தொடர்ந்து இயக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு சலுகைகளை வழங்கி ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க ஆகஸ்ட் மாதத்திற்கான சம்பளம் மூன்று நாட்கள் கடந்த பின்னரும் வரவில்லை என்று பிஎஸ்என்எல் ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சம்பள பிரச்சினையில் பிஎஸ்என்எல் சிக்குவது ஒரே ஆண்டில் இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னர் கூட இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்ட போது குறிப்பிட்ட சில நாட்களில் சம்பளம் வந்துவிடும் என்று நிர்வாகத்திடம் இருந்து பதில் கிடைத்ததாகவும் ஆனால் இந்த முறை எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை என்றும் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் ஒப்பந்த பணியாளர்களுக்கு 78 நாட்களுக்கான நிலுவைத் தொகை வந்து சேரவில்லை என்பதும் அவர்களது புகாராக உள்ளது.

ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை அன்று பிஎஸ்என்எல் ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தெலுங்கானா மாநிலத்தில் 8500 ஊழியர்கள் இருக்கும் நிலையில் 6500 பேர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய பிஎஸ்என்எல் தொழிற்சங்க நிர்வாகிகள், தங்கள் நிறுவனத்தை மீட்க மத்திய அரசு அர்த்தமுள்ள எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார்.