சிறுநீரக சிகிச்சைக்கு வந்த கூலித் தொழிலாளிக்கு எலும்பு நோய்க்கு சிகிச்சை அளித்ததாக திருச்சி எஸ்ஆர்எம் ஹாஸ்பிடல் மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
கிட்னி சிகிச்சைக்கு சென்றவருக்கு எலும்பு சிகிச்சை! SRM ஹாஸ்பிடலில் கூலித் தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்!
தஞ்சை மாவட்டம் பூதலூரை சேர்ந்தவர் வடிவேலு. இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். திடீரென இவருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள மருத்துவமனைக்கு வடிவேலுவை அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். வடிவேலுவை பரிசோதித்த உள்ளூர் மருத்துவர் அவருக்கு சிறுநீரகத்தில் பிரச்சனை இருப்பதாக கூறியுள்ளார்.
இதனை அடுத்து திருச்சி சமயபுரத்தில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனைக்கு செல்லுமாறு அந்த டாக்டர் வடிவேலுவை பரிந்துரைத்துள்ளார். இதனை அடுத்து எஸ்ஆர்எம் மருத்துவமனைக்கு சென்று தினமும் வடிவேலு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் உடல் நிலை மேலும் மோசமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த வடிவேலு உறவினர்கள் அவரை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு வடிவேலுவை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுநீரக பிரச்சனை உள்ள நிலையில் அவருக்கு எலும்பு நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வடிவேலு மற்றும் குடும்பத்தினர் எஸ்ஆர்எம் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எலும்பு நோய் சிகிச்சை அளித்த காரணத்தினால் வடிவேலுவின் உடல் நிலை மேலும் மோசமாகிவிட்டதாக அவரது உறவினர்கள் புகார் அளித்தனர். இது குறித்து நியாயம் கேட்கச் சென்றால் எஸ்ஆர்எம் மருத்துவர்களும் நிர்வாகிகளும் தங்களை மிரட்டுவதாகவும்அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.