கர்ப்பிணி தங்கையின் தலையில் துப்பாக்கியால் சுட்ட கொடூர அண்ணன்கள்! நெஞ்சை உறைய வைக்கும் காரணம்!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வேறு சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்த கர்ப்பிணிப் பெண்ணை அவரது தலையில் சுட்டுக் கொன்ற அந்தப் பெண்ணின் சகோதரர்கள் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.


இந்தூரைச் சேர்ந்த புல்புல் என்ற பெண்ணும், குல்தீப் ரஜாவத் என்பவரும் காதலித்த நிலையில் பெண்ணின் குடும்பத்தினர் திருமணத்துக்கு மறுத்ததால் கடந்த 8 மாதங்களுக்கு முன் இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டு தனியாக வீடு எடுத்து தங்கினர். 

இந்நிலையில் கருவுற்ற புல்புல்லுக்கு தனது பெற்றோரைக் காண ஏக்கம் ஏற்பட்டதை அடுத்து தம்பதிகள் புல்புல்லின் பெற்றோரைக் காணவந்தனர். இதனைத் தொடர்ந்து இருவரும் தங்கள் வீட்டுக்குத் திரும்பிய நிலையில் அவர்களைப் பின் தொடர்ந்து அவர்கள் வீட்டுக்கு வந்த புல்புல்லின் சகோதரர்கள் அவரை தலையில் சுட்டுக் கொன்றதாக குல்தீப் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்..

இந்நிலையில் புல்புல்லின் இரண்டு சகோதரர்களும் இந்தூரில் உள்ள பெட்மா காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். தங்கள் சகோதரி வேறு ஜாதி இளைஞரை காதலித்து திருமணம் செய்து தங்கள் பெருமையை சீரழித்துவிட்டதால் கொலை செய்ததாக அவர்கள் திமிராகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.