நண்பனின் அக்காவை 2ம் தாரமாக்க முயற்சி! இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மயானத்தில் முகம் மற்றும் உடம்பு பகுதியில் கத்திக்குத்துகளுடன், பாதி எரிந்த நிலையில் இருந்த சடலத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தன் தங்கையை காதலித்து வந்த வரை  கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் அப்பெண்ணின் சகோதரர்.பின்னர் இரவு நேரம் என்பதால் யாரும் இல்லாத நேரம் பார்த்து உடலை அருகில் உள்ள மின் மயானத்துக்கு கொண்டு சென்று எரித்துள்ளனர். 

இந்நிலையில் காலையில் மின் மயானத்திற்கு வந்த ஊழியர் ஒருவர் இந்த சடலத்தை பார்த்து அதிர்ந்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி இதனை பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னால் வள்ளியூரில் ஸ்டுடியோ வைத்திருந்த  ரஜினிகுமாரை காணவில்லை என வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் பதிவாகியிருந்த நிலையில் இறந்தவரின் உடலிலுள்ள அங்க அடையாளங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு போலீசார் அவர் ரஜினிகுமார் தான் என உறுதிப்படுத்தினர்.

பின்னர் ரஜினிகுமாரின் செல்போனை போலீசார் ஆய்வு செய்த போது பெருமாள் புரத்தை சேர்ந்த கேதீஸ்வரன் என்பவர் கடைசியாக அவரிடம் பேசியது தெரியவந்தது.இதையடுத்து கேதீஸ்வரனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீஸாரிடம் கேதீஸ்வரன் கூறியது மனைவியை விவாகரத்து செய்த ரஜினிகுமார் கேதீஸ்வரனின் அக்கா அனுஷாவை காதலித்ததாகவும், இது கேதீஸ்வரனுக்கு பிடிக்கவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்தது.பலமுறை எச்சரித்தும் ரஜினிகுமார் கேட்காததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

இதையடுத்து கேதீஸ்வரன் அவரது நண்பர்கள் பைசல், பழனி ஆகியோர் ரம்ஜான் விருந்து வைப்பதாக கூறி ரஜினிகுமாரை காரில் அழைத்துச் சென்றதும், காருக்குள் வைத்து சரமாரியாகக் கத்தியால் குத்திக் கொன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.பின்னர் மயானத்தில் உடலை எரித்துவிட்டு தப்பிச் சென்றதாக கேதீஸ்வரன் தெரிவித்ததன் பேரில் போலீசார் அவரது நண்பர்கள் இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.