பிரிட்டானியா ரஸ்க் ரொட்டிக்குள் இரும்பு போல்ட் துண்டு..! குழந்தைக்கு வாங்கிச் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! கரூர் பரபரப்பு!

பேருந்து நிலையத்தில் வாங்கிய ரஸ்க்கில் இரும்பு போல்டு இருந்ததாக கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


நேற்று கரூர் மாவட்டம் ஜெகதாபி அடுத்த பொராணி கிராமத்தை சேர்ந்த விவேகானந்தன் என்பவர் கரூர் பேருந்து நிலையத்தில் ஒரு தனியார் நிறுவனத்தின் ரஸ்க் பாக்கெட் ஒன்றை வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது ஏதோ கல் இருப்பது போல் தட்டுப்பட என்னவென்று பார்த்துள்ளார். அதில் ஒரு ரஸ்க்கில் இரும்பு போல்ட் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உடனடியாக அதை அப்படியே எடுத்துக்கொண்டு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளித்தார் மேலும் அந்த ரஸ்க்கில் இரும்பு போல்ட் ஒன்று இருப்பதை செய்தியாளர்களிடம் காண்பித்தார். குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் இந்த ரஸ்க்கில் இரும்பு போல்ட் இருப்பது சாப்பிடும்போதுதான் தெரிந்ததாக குற்றஞ்சாட்டினார்.

மேலும் ரஸ்க் பாக்கெட் தயாரிக்கும் பிரிட்டானியா நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார் விவேகானந்தன். பேருந்து நிலையங்களில் விற்கப்படும் பெரும்பாலான பொருட்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி போன்றவை இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது.  

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்தபோது எந்திரத்தின் உதவியுடன்தான் ரஸ்க்கிற்கான மாவு கலக்கப்படுகிறது என்றும், மாவு கலக்கும் எந்திரத்தில் இருந்து போல்ட் கழன்று விழுந்திருக்கலாம் கூறுகின்றனர். எனினும் விவேகானந்தனின் புகார் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.