பெற்றோர் கவனத்திற்கு! கோ எஜூகேசன் பள்ளிகளின் அதிர வைக்கும் பிளஸ் டூ தேர்ச்சி முடிவுகள்!

இருபாலர் பயிலும் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பது பிளஸ்டூ தேர்வு முடிவுகள் தொடர்பான ஆய்வில் தெரியவந்துள்ளது.


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் வழக்கம் போலவே மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். எனினும் இந்த தேர்வு முடிவுகள் மூலம் மற்றொரு உணமையும் வெளியாகியுள்ளது. 

மாணவர்கள் மட்டுமே படிக்கும் பள்ளிகளை விட, மாணவர் - மாணவியர் என இரு பாலரும் படிக்கும் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பதுதான் அது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் : பெண்கள் பள்ளிகள் 93.75%; இரு பாலர் பள்ளிகள் 91.67 சதவீதம்; ஆண்கள் பள்ளிகள் 83.47% மட்டுமே 

இதற்கு உளவியல் ரீதியாக பல்வேறு காரணங்கள் இருப்பதாக கருதப்படுகிறது. மாணவிகள் முன்னிலையில் கல்வி கற்காமல் அவமானப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற உந்துதல் காரணமாக இயல்பாக மாணவர்கள் ஆர்வத்தோடு படிப்பதற்கான வாய்ப்பு, இரு  பாலர் பள்ளிகளில்தான் இருப்பதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

பெண்கள் மட்டுமே பயிலக்கூடிய பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், அதிக அளவில் இருக்கக் காரணம், ஆண் நண்பர்கள் தொடர்பான கவனச்சிதறல்கள் இல்லாதது, பெண்கள் நடுவேயான போட்டி மனப்பான்மை போன்றவை காரணமாக கூறப்படுகிறது. 

மாணவர்கள் மட்டுமே பயிலக்கூடிய பள்ளிகள் அவர்களின் கல்வித் தரத்தை பாதிக்கிறது என்பது புள்ளிவிவரத்துடன் உறுதியாகி உள்ளதால், இருபாலர் பயிலும் பள்ளிகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.