தொப்புள் கொடியுடன் தண்டவாளத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளத்தையொட்டி புதரில் கவலைக்கிடமான நிலையில் கிடந்த பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை மீட்கபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.


கண்டமங்கலத்தை அடுத்த ஆழியூர் ரயில்வே கேட் அருகே உள்ள மக்கள்தான் பரிதாபத்துக்குரிய அந்தக் காட்சியைக் காண நேர்ந்தது. புதரில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை தொப்புள் கொடியுடன் கழுத்தை நெறித்து தூக்கி வீசப்பட்டிருந்தது 

முட்புதரில் குழந்தை அழும் சத்தம் கேட்ட கெளசல்யா என்ற பெண், அந்தக் குழந்தையை மீட்டு கண்டமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தார். இதனைத் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அந்தக் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. 

அந்தக் குழந்தையை தன்னிடமே தந்துவிடும்படி கவுசல்யா கேட்டுக்கொண்டுள்ள நிலையில் பலரும் குழந்தையை தத்தெடுக்க முன் வந்துள்ளனர். பிறந்து தொப்புள் கொடியை கூட அகற்றாமல் இப்படி ஒருகுழந்தையை வீசிச் சென்றவர்கள் நிச்சயமாக இரக்கமற்ற விலங்குகளை போன்றவர்கள் என்று அப்பகுதி மக்கள் சாபமிட்டனர்.