ரத்தம் கிடைக்காமல் இனி ஒரு உயிர்கூட போகக்கூடாது என முடிவெடுத்த நண்பர்கள் ஒன்றாக இணைந்து ரத்ததானம் செய்த நெகிழ்ச்சிகரமான சம்பவம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது.
ரத்தம் கிடைக்காமல் எங்கள் நண்பன் உயிரிழந்தான்..! இனி யாருக்கும் அப்படி நடக்க கூடாது! நெகிழ வைத்த மதுராந்தகம் இளைஞர்கள்!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்த நிர்மல்குமார் என்ற இளைஞர் கடந்த வருடம் மறைமலை நகரில் விபத்தில் ஒன்றில் சிக்கி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்டடார். அப்போது விபத்தில் அதிக அளவு ரத்தம் வெளியேறிவிட்டதால் உடனடியாக அவரை காப்பாற்ற போதிய ரத்தம் கிடைக்கவில்லை. இதனால் பரிதாபமாக மருத்துவமனையில் உயிரிழந்தார் நிர்மல்குமார்.
இதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்ட அவரது நண்பர்கள் ரத்தம் கிடைக்காமல் இனி ஒரு உயிர் கூட போகக்கூடாது என நிர்மல்குமாரின் நினைவு நாளில் சபதமேற்றனர். முதற்கட்டமாக அவரது நினைவு நாளான நேற்று நண்பர்கள் 50க்கும் மேற்பட்டோர் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு திரண்டனர். அங்கு அனைவரும் ரத்த தானம் செய்தனர். மேலும் இதுபோலவே ஒவ்வொரு வருடமும் நண்பனின் மறைவு நாளில் ரத்ததானம் செய்வோம் என உறுதிமொழி கூறினர். இதை பார்த்த அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.