ஒரே மாவட்டத்தில் 2 அமைச்சர்கள்! ஒருவர் காலை வாரிவிட காத்திருக்கும் இன்னொருவர்! திருவள்ளூர் அரசியல்!

திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள்.முதலாமவர் ஆவடி தொகுதி எம்.எல்.ஏவான அமைச்சர் பாண்டியராஜன்.


பிஜேபி கட்சியில் சேர்ந்து அரசியல் வாழ்வை துவங்கி,அங்கிருந்து தேமுதிகவிற்கு தாவி,விஜயகாந்த் புண்ணியத்தில் விருதுநகர் எம்.எல்.ஏ ஆனவர் பாண்டியராஜன். விஜயகாந்த் வேலைக்கு ஆகமாட்டார் என்று கணித்த பாண்டியராஜன் அதிமுகவில் இணைந்து ஆவடித் தொகுதியில் ஜெயித்து அமைச்சரானவர்.

அமைச்சர் பெஞ்சமின்.சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்து மதுரவாயில் தொகுதியில் ஜெயித்து எம்.எல்.எ ஆனவர்.இவருக்கும் பாண்டியராஜனுக்கும் நீண்டநாட்களாக இருந்து வரும் உட்கட்சி பூசல் நேற்று வெளிப்படையாக வெடித்தது.திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அயனம்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் ஆதிதிராவிட மாணவிகள் தங்கிப் படிக்க 13 அறைகள் கொண்ட விடுதிகட்ட முடிவு செய்தது அரசு முடிவு செய்தது.

அதற்கான பூமி பூஜை விழா நேற்று நடைபெற்றது.அந்த நிகழ்வில் அமைச்சர் பாண்டியராஜன், ராஜலட்சுமி, பெஞ்சமின் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ஆகியோர் கலந்துகொள்ள இருந்தனர்.இந்த மாணவியர் விடுதி கட்டப்படும் திருவேற்காடு பகுதி அமைச்சர் பாண்டியராஜனின் ஆவடித் தொகுதிக்குள் வருகிறது.

ஏற்கனவே அவரோடு முட்டிக்கொண்டு இருக்கும் பெஞ்சமின் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்து,விழாவுக்கு வந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரை கொண்டு அமைச்சர் பாண்டியராஜனுக்கு கருப்புக்கொடி காட்ட ஏற்பாடு செய்தாராம்.காலை 10.30 மணிக்கு விழா நடைபெற இருக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் 9.30 மணிக்கே வந்து குவிந்து விட்டனர்.

இந்த விவகாரத்தைத் தெரிந்து கொண்ட பூந்தமல்லி வட்டாட்சியர் காந்திமதி அங்கு வந்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரை சமாதானப் படுத்த முயற்சித்தார்.அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததை அடுத்து அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டார்.கூட்டம் நடக்கும் இடத்திற்கு இவர்களை அனுமதிக்க வேண்டாம் என்று அவர் போலீசாரிடம் சொல்லி விட்டுப் போனதால்,கருப்புக் கொடி காட்ட வந்தவர்களைப் போலீசார் தடுத்து விட்டனர்.

ஆனாலும்,10.30க்கு நடப்பதாக இருந்த விழாவுக்கு அமைச்சர்கள் யாரும் வராததால் வட்டாட்சியர் காந்திமதி,திருவேற்காடு நகாராட்சி ஆணையர் சித்திரா,மற்றும் அதிமுகாவினர் காத்திருந்தனர்.பின்னர் 1.30 மணியளவில் அமைச்சர்கள் பெஞ்சமின்,ராஜலட்சுமி,மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ஆகியோர் வர பூமிபூஜை அவசர கதியில் நடைபெற்றது. சொந்தத் தொகுதியில் நடைபெறும் விழா என்றபோதும் பெஞ்சமின் கோஷ்ட்டியால் அவமானம் நேரும் என்பதால் அமைச்சர் பாண்டியராஜன் கடைசிவரை விழாவுக்கு வரவே இல்லை.