பாஜக புதிய தலைவர் யார்? ஜேபி நட்டாவுடன் மேலும் 2 பேர் போட்டா போட்டி!

அமித் ஷா மத்திய அமைச்சரானதை தொடர்ந்து, பாஜக தலைவர் பதவிக்கு போட்டி வலுத்துள்ளது.


 பாஜக தேசிய தலைவராக இருந்த அமித் ஷா தற்போதைய மக்களவைத் தேர்தலில், வெற்றி பெற்று எம்பி ஆகியுள்ளார். புதிய அமைச்சரவையில் அவருக்கு உள்துறை அமைச்சராக பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் முழுநேர அமைச்சராக மாறிவிட்ட நிலையில், பாஜக.,விற்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி, முன்னாள் மத்திய அமைச்சர் ஜேபி நட்டா, பாஜக தலைவர் பதவியை கைப்பற்ற தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஹிமாச்சல் பிரதேசத்தைச்சேர்ந்த அவர், பாஜக.,வின் தலைமையான ஆர்எஸ்எஸ் நம்பிக்கையை பெற்ற நபர்களில் ஒருவராக உள்ளார். தற்போது 58 வயதாகும் நட்டா, மத்திய அரசுக்கும், கட்சிக்கும் இடையே நல்ல இணைப்பு பாலமாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் அவர் பாஜக நாடாளுமன்ற குழுவின் உறுப்பினராகவும் உள்ளதால், தலைவர் பதவி கிடைக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. இதேபோல, பாஜக.,வின் தேசிய பொதுச் செயலாளராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் உள்ள பூபேந்திர யாதவ் மற்றும் குஜராத் மாநில பாஜக பொறுப்பாளராக உள்ள ஓ.பி.மாத்தூர் உள்ளிட்டோரும் தலைவர் பதவியை எதிர்பார்த்து, தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி காய் நகர்த்தி வருகின்றனர்.

வலுவான போட்டி உள்ளதால், யார் பாஜக.,வின் புதிய தலைவராக நியமிக்கப்படுவார் என, பல தரப்பிலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் மோடி - அமித் ஷா எடுப்பதே இறுதி முடிவாக இருக்கும்.