சிறை பிடிக்கப்பட்ட போலீஸ்! அடி உதை! ரத்தம் சொட்ட சொட்ட ஓடிய பரிதாபம்!

பாட்னா: பீகாரில் கலவர கும்பல் ஒன்று, போலீசாரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பீகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்டத்தில்தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள கிராமம் ஒன்றில் இளைஞர்கள் 2 பேரை காணவில்லை எனக் கூறப்படுகிறது. அவர்களை பொதுமக்கள் தீவிரமாக, தேடிவந்த நிலையில், இருவரின் சடலமும் கிராமத்தில் உள்ள சாக்கடை ஒன்றில் கிடந்தது.

இதற்கு போலீசார்தான் காரணம் என முடிவு செய்த பொதுமக்கள் உடனடியாக, உள்ளூர் போலீசாரை ரவுண்டு கட்டி அடி வெளுத்தனர். அத்துடன் நிற்காமல், போலீசாரை சிறைப்பிடித்து வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  

இதையடுத்து சம்பவ இடத்திற்கு உயர் அதிகாரிகள் தலைமையில் கூடுதல் போலீசார் விரைந்து, பொதுமக்களை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால், அவர்கள் கட்டுக்கடங்காமல் ஆவேசப்பட்டதை தொடர்ந்து, வேறு வழியின்றி, வானத்தை நோக்கி துப்பாக்கியால் போலீசார் சுட்டனர்.

இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து ஓடினர். உடனடியாக, அங்கு சிறை பிடிக்கப்பட்டு, ரத்த காயங்களுடன் போராடிய 3 போலீசாரையும் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சக போலீசார் சேர்த்தனர். இதற்கிடையே, இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.