கொட்டும் மழையிலும் தளராமல் கடமையை நிறைவேற்றிய சபாஷ் போலீஸ்காரர்! வைரல் வீடியோ!

கொட்டும் மழைக்கிடையே உறுதி தளராமல் நடுச்சாலையில் நின்று பணியாற்றிய போக்குவரத்துக் காவலருக்கு நேரிலும், இணையதளத்திலும் புகழ் மாலைகள் குவிந்து வருகின்றன.


அசாம் காவல்துறையில் கடந்த 2015-ஆம் ஆண்டு செர்ந்த மிதுன் தாஸ் கவுகாத்தியின் பசிஸ்தா பகுதி காவல் நிலையத்தில் 2017-ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்டார். இந்நிலையில் கடும் புயலுக்கும், கொட்டும் கன மழைக்கும் இடையே நின்று மிதுன் போக்குவரத்தை சிரத்தையுடன் ஒழுங்கு படுத்திய வீடியோ இணைய தளத்தில் வெளியாகியுள்ள நிலையில் மக்கள் மத்தியில் அவர் ஹீரோவாகியுள்ளார். 

கவுகாத்தி காவல்துறை சார்பில் டிவிட்டரில் வெளியிட்ட பதிவில் மிதுனுக்கு  பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரத்தை என்பதற்கு உதாரணமாக மிதுன் திகழ்வதாகவும் அவருக்கு வீரவணக்கம் செலுத்துவதாகவும் கவுகாத்தி போலீசார் தெரிவித்துள்ளனர்.

பணியில் அர்ப்பணிப்பு என்பதை மிதுனிடம் இருந்து தாங்களுக் கற்றுக்கொண்டதாகவும் அந்தப் பதிவில் தெரிவிக்கபப்ட்டுள்ளது. கொட்டும் மழையிலும் தனது கடமையை மிதுன் சரியாக செய்தது அனைவரையும் புல்லரிக்க வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம் டி.ஜி.பி. குலாதர் சைக்கியாவும் மிதுனை பாராட்டியுள்ளார். மிது மழையில் நின்று பணியாற்றிய காட்சிகள் தன்னை வெகுவாகக் கவர்ந்ததாகக் கூறியுள்ள அவர், மிதுனை நேரில் அழைத்துப் பாராட்டியதாகத் தெரிவித்துள்ள அவர், காவல்துறையினர் ஒவ்வொருவரும் எத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் கடமை உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.